காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபணைக் கடிதங்களை நகராட்சியிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது. பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் அமையப்பெறாத மேற்படி வார்டு மறுவரையைறையை நிறுத்தி வைக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட வார்டுகள் மறுவரையறை அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம், கடந்த திங்கட்கிழமையன்று (08.01.2018.) மக்கள் குறைதீர் வாராந்திரக் கூட்டத்தின்போது, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
டிசம்பர் மாதம் இறுதியில் - காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான - சீரமைக்கப்பட்ட, வரைவு வார்டுகள் விபரம் - வெளியிடப்பட்டது.
நகராட்சியினால் வெளியிடப்பட்ட அந்த வார்டுகள் விபரம், பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்களின், பொது நல அமைப்புகளின் எந்த ஆலோசனையும் பெறாமல், வெளியூர்களில் இருந்து காயல்பட்டினத்தில் பணிப்புரியும் அதிகாரிகளால் - உள்ளூர் நிலவரங்களை அறியாமல் இந்த வரைவு வார்டுகள் விபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட விதிமுறையான 2011 மக்கள்தொகை அடிப்படையில் இந்த வரைவு வார்டுகள் அமையவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படாமல், வீட்டு தீர்வைகள் எண்ணிக்கையை (PROPERTY TAX ASSESSMENTS) அடிப்படையாக கொண்டு - இந்த வரைவு வார்டுகள் விபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சி பயன்படுத்தியுள்ள, வீட்டு தீர்வுகள் எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது; இதனால் - அதனை மையமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு வார்டுகள் விபரம், ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லை.
சர்வே எண்கள் கொண்டு வார்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்படாததால், நகரின் பல பகுதிகள் எந்த வார்டுகளுக்குள் வரும் என்ற குழப்பம் - இந்த வரைவு வார்டுகள் விபரத்தால் - ஏற்படுகிறது.
எனவே - காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டுள்ள வரைவு வார்டுகள் விபரம், நிறுத்தப்பட்டு, புதிய வார்டுகள் விபரம் - அறிவிக்கப்படும். பொது மக்களின், பொது நல அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் ஆலோசனை பெற்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மாதிரி வார்டுகள் விபரம் - மறுவரையறை அதிகாரியான, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
08.01.2018. திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தில், மாவட்ட மறுவரையறை அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடமும் - இது சம்பந்தமான கோரிக்கை - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வைக்கப்பட்டதோடு, அதுகுறித்து செய்தியாளர்களிடமும் விளக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 4:30 pm]
[#NEPR/2018010802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|