மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படும் குருதிக்காக – மாற்று குருதிக் கொடையாளர்களைக் கொண்டு வர நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக, கடந்த திங்கட்கிழமையன்று (08.01.2018.) மக்கள் குறைதீர் வாராந்திரக் கூட்டத்தின்போது, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இந்திய அரசாங்கத்தின் இரத்த தான கொள்கை (NATIONAL BLOOD POLICY) - இரத்த வங்கிகள், மூலம், நாட்டின் இரத்த தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என தெரிவிக்கிறது. இதன் மூலம் - முற்றிலும் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தம், தேவையானவர்களுக்கு சென்றடையும் என்றும் அந்த கொள்கை தெரிவிக்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் - தூத்துக்குடி மாவட்டம் உட்பட அனைத்து பகுதிகளின் தனியார் மருத்துவமனைகள், இந்த கொள்கைக்கு மாற்றமாக செயல்புரிகிறார்கள். சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், அவர்களுக்கு இரத்த தேவை ஏற்படும் போது - மாற்று இரத்த கொடையாளர்கள் கொண்டு வரப்பட்டால் தான் (REPLACEMENT DONORS) இரத்த தேவை பூர்த்தி செய்யமுடியும் எனக்கூறி - அலைகளைக்கப்படுகிறார்கள்.
இதனால் - அந்நோயாளிகளின் குடும்பத்தினர் பெருத்த சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் - தனியார் மருத்துவமனைகள் - இரத்த வங்கிகளில், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரத்தத்தை பயன்படுத்தாமல், கொடையாளர்களிடம் பெறப்பட்ட இரத்தத்தை உடனடியாக பயன்படுத்தும் - ஆபத்தான செயல்களும் நிகழ்கிறது.
எனவே - மாவட்ட நிர்வாகம், இது குறித்து - தனியார் மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கிடவேண்டும். நோயாளிகளை நிர்பந்தம் செய்து இரத்தம் கோரும் வழமையை நிறுத்திக்கொண்டு, தனியார் மருத்துவமனைகள் - இரத்த வங்கிகளை நாடிட அறிவுறுத்தவேண்டும்; அல்லது அந்த தனியார் மருத்துவமனைகளே - இரத்த வங்கிகளை துவங்கிட அறிவுறுத்தவேண்டும்.
இதன் மூலம் - ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், மேலும் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவது தவிர்க்கப்படும்; பாதுகாப்பான இரத்தம் தேவையானவர்களை சென்றடைவதும் உறுதி செய்யப்படும்.
இது சம்பந்தமான மனு - இன்று, மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம், அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளுடன் இணைந்து, காயல்பட்டினத்தில் தொடர்ச்சியாக இரத்த தானம் முகாம்களை நடத்திவருகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 5:30 pm]
[#NEPR/2018010803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|