காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபணைக் கடிதங்களை நகராட்சியிடம் வழங்கியுள்ளது. மேலதிகமாக, 18 வார்டுகளின் எல்லைகள் எவ்வாறு அமைய வேண்டும் என - “நடப்பது என்ன?” குழுமம் பரிந்துரைக்கும் – ஆவணங்கள், 05.01.2018. அன்று நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து நகர பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றின் ஒளிப்பிரதிகள் – நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகளுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 05க்கு முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் – மாவட்ட மறுவரையறை அலுவலரான மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார். (தற்போது - ஆட்சேபனைகளை பதிவு செய்ய கால அவகாசம், ஜனவரி 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.)
அதனை தொடர்ந்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பல்வேறு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஆட்சேபனை கடிதங்கள் ஜனவரி 2, ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 தேதிகளில், தலைவர், மறுவரையறை ஆணையம் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், சென்னை), மாவட்ட மறுவரையறை அதிகாரி (மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி) மற்றும் வார்டு மறுவரையறை அலுவலர் (ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி) ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
ஜனவரி 5 அன்று - நடப்பது என்ன? குழுமம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு வார்டுகள் பரிந்துரை விபரம், நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் இன்று வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன?சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 08, 2018; 4:00 pm]
[#NEPR/2018010801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|