“நடப்பது என்ன?” குழுமத்தின் பெண் நிர்வாகிகளது தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தைக்கா பள்ளியின் பழைய – பழுதடைந்த கட்டிடத்தை இடித்தகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தைக்கா தெருவில், ஸாஹிப் அப்பா தைக்கா கொடிமரத்திற்கு மேற்கே தைக்கா பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தற்போது நடுநிலைப் பள்ளி) இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அது சிவன்கோவில் தெருவில் புதிய கட்டிடத்தில் இயங்கத் துவங்கியதையடுத்து, இந்த பழைய கட்டிடம் செயல்பாடற்றுக் கிடந்தது.
இதன் காரணமாக அக்கட்டிடம் - சமூக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெறும் இடமாக உள்ளதாக அப்பகுதி மக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகளிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறையிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய “நடப்பது என்ன?” குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் - அக்கட்டிடத்தை இடித்தகற்றிட வலியுறுத்தி கைச்சான்றுகளைப் பெற்றனர். அவற்றுடனான மனு - சென்னை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள - இது தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. அதனையடுத்து, அதிகாரிகளும் அவ்விடத்தைப் பார்வையிட்டு, தங்கள் பரிந்துரையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இவ்வாறிருக்க, பழுதடைந்த அக்கட்டிடத்தை இடித்தகற்றிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS, கடந்த ஆகஸ்ட் 23 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த ஆணையில் - அந்நிலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து - பழுதடைந்த கட்டிடத்தை இடித்து, அந்நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள - ஒப்பந்தப்புள்ளிகள், தமிழக அரசு சார்பாக கோரப்பட்டது.
பழைய தைக்கா பள்ளி கட்டிடத்திற்கும், சாலைக்கும் இடையே - வேறு கட்டுமானங்கள் இருப்பதால், இப்பழைய கட்டிடத்தை இடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அருகில் உள்ள கட்டுமானத்தின் உரிமைதாரரின் சம்மதம் பெற்று, பழைய தைக்கா பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி – 29.12.2017. அன்று துவங்கியது.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இக்கட்டிடத்தை அகற்றுவது குறித்து முழு முயற்சி எடுத்த “நடப்பது என்ன?” குழும பெண்கள் பிரிவு நிர்வாகிகளுக்கு, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம், எல்லாப்புகழும் இறைவனுக்கே!
மேலும், இதற்கான உத்தரவைப் பிறப்பித்த மாவட்ட ஆட்சியர், கடந்த சில மாதங்களாக இது தொடர்பான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்த தூத்துக்குடி & திருச்செந்தூர் ஊராட்சித் துறை அதிகாரிகள் அனைவருக்கும், இம்மனு மீது துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய கல்வி & ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலர்களுக்கும் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 30, 2017; 2:00pm]
[#NEPR/2017123001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|