எல்லாம் வல்ல ஏக நாயனின் நல்லருளால், அவனின் பெரும் துணையுடன் செளதி அரேபியா – ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழு “காயலர் சங்கமம்” துவக்க நிகழ்வுகள் ஜித்தா ஹஜ் விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இஸ்திராஹா எனும் மிக விசாலமான ஓய்வு இல்லத்தில் வைத்து சிறப்பாக நடந்தேறிய அந்நிகழ்வு குறித்த அம்மன்றத்து அறிக்கையின் விபரம்.
கடந்த 09-02-2018 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் காயலர் சங்கமம் என்ற இனிய இந்நிகழ்வின் ஆரம்பமாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா, ஷரஃபியா, ஆர்யாஸ் உணவக வளாகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுந்தில் சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதர், சகோ.எஸ்.எஸ். ஜாபார் சாதிக், சகோ. சட்னி எஸ்.ஏ .கே.செய்யது மீரான், சகோ. எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாய், சகோ. எம்.என். ஷமீம் ஆகியோர் தலைமையில் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர், சொந்த வாகன வசதி உள்ளவர்கள் தத்தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். சிலர் சிற்றுந்தை பின் தொடர்ந்து வந்தனர். புனித மக்காவிலிருந்தும், மதீனா மற்றும் யான்புவிலிருந்தும் தமது வாகனம் மூலம் உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களுடன் திரளாக வந்து சேர்ந்தனர்.
வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் தலைமையில் வரவேற்புக் குழுவினர்கள் சகோ. பிரபு எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா, சகோ. ஏ.எம்.செய்யது அஹமது ஆகியோர் அகமகிழ வரவேற்றனர்.
காலை உணவு:
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவை மிக்க காலை உணவு பசியாற இட்லி, உளுந்துவடை மற்றும் பொங்கல், பஃபே முறையில் பரிமாறப்பட்டு, காயலின் சுவைமிகு இஞ்சி ஏலம் தேயிலையுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர். மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் புதிதாய் வந்தவர்கள் உட்பட உறுப்பினர்கள் யாவரும் தம் வருகையை பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தி கொண்டனர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பியும் தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராகவும் இணைத்து கொண்டார்கள்.
விளையாட்டு போட்டிகள் :
முதலாவதாக காலை 10:00 மணியளவில் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானது.
தொப்பி அணிந்து அதிலிருந்து இருபக்கமும் தொங்கிக் கொண்டு இருக்கும் டீ பேக் தனை தலையை ஆட்டி தொப்பியின் முன்பக்கம் தூக்கிப்போட்டு வைக்க வேண்டும், என்ற போட்டியும், அதனை அடுத்து நெற்றியில் கட்டப்பட்டு முன்பக்கம் தொங்கிக் கொண்டு இருக்கும் பிளாஸ்டிக் ஸ்ப்ரிங் தனை, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு தலையை உயர்த்தி தூக்கிப்போட்டு சரியாக தன் நெற்றியில் உட்கார வைக்க வேண்டும், என்ற போட்டியின் நிபந்தனையுடன் நடந்த விளையாட்டு மிக அழகான விளையாட்டாக அமைத்திருந்தது.
அதனை அடுத்து ஒருவர்பின் ஒருவராக நிற்கும் 8 பேருக்கு இடையில் பலூன் வைத்து அணைத்துக்கொண்டு, கைகளை பிடரியில் கட்டியபடி, அது கீழே விழுந்து விடாமலும், இறுக்கத்தால் வெடிக்காமலும் ஒரு குறிப்பிட தூரத்தை விரைவில் அடையும் குழு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கண்டு பிடி என்ற ஒரு அழகான தொகுப்பை சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது ஆகிய இருவர் காணொளி காட்சி மூலம் திறையிட்டு காட்டி, 6 பேர்கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட குழுவிடம், 35 நம்பர் கொண்ட ஒரு ஸ்லைட் காட்டி, அதில் விரும்பிய எண்ணை தேர்வு செய்ய அது ஒவ்வொன்றாக திறக்க அதில் மறைந்திருக்கும் நம் ஊரின் முக்கிய பிரமுகர், அல்லது நமதூரின் பள்ளிவாயில் தென்படும், ஒரு குழுவிற்கு 5 எண்கள் திறக்கவே அனுமதியுண்டு, முக்கிய பிரமுகரின் கண், மூக்கு, மற்றும் பள்ளிவாயிலின் ஒரு பகுதி மினரா அல்லது முகப்பு வாயில் இவைகள் தெரிந்தயுடன் மிக சரியாக சொல்லும் குழுவினரே வெற்றியாளர் என்ற நிபந்தையுடன் போட்டி விறு விருப்பாக ஆரம்பமானது. இந்த அழகான சிந்திக்க வைத்த போட்டி எல்லோரையும் மிக கவர்ந்து உற்சாகப்படுத்தியது.
குட்டீஸ் போட்டிகள்:
மறுபுறம், குட்டீஸ்களுக்கான வெளி விளையாட்டரங்கில் மழலைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், ஓட்டபந்தயம் என அனைத்து போட்டிகளிலும் மழலைகளும், சிறுவர்களும், சிறுமியர்களும் மிகுந்த சந்தோசத்துடனும் சுறுசுறுப்புடனும் கலந்துகொண்டனர். சிறார்களின் விளையாட்டுக்களை தாய்மார்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ.எம்.என்.முஹம்மது ஷமீம் குட்டீஸ்களின் சுட்டித்தனத்தை வெகுவாக சமாளித்து மிக நேர்த்தியாக அழகுற நடத்தினார்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. காயல் தமிழ், வினாடி வினா போன்ற ஏராளமான பொழுபோக்கு நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மங்கையர்களுக்குரிய போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
ஜும்ஆ தொழுகை:
ஜும்ஆ தொழுகை நேரமானதால் மதியம் 12:30 மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன், தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு, நீச்சல்குளம் திறக்கப்பட்டது. சிறுவர் மற்றும் பெரியவர்கள் நீந்தி விளையாடி மகிழ்ச்சி பெருக்கில் ஆரவாரித்தனர். மதியம் 01:00 மணி அளவில் உள்ளரங்கில், இலங்கையைச் சார்ந்த ஆலிம் பெருந்தகை மவுலவி அஷ்ஷேகு இபுராஹீம் மதனி அவர்களால் குத்பா பேருரை ஆரம்பமானது. உத்தம நபிகளின் உன்னத சஹாபாக்கள் மிக வறுமையில் இருந்து உழைக்கும் போதும், அவர்கள் ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்து வந்தார்கள். அள்ளி அள்ளி கொடுத்து நாம் செய்யும் தர்மம் நிச்சயம் குறையாது. வல்ல ரஹ்மான் நமக்கு அதனை இரட்டிப்பாக்கி தருவான். எனவே நாம் அனைவர்களும் தர்மம் கொடுப்பதில் போட்டி போட வேண்டும் என்றும், அதில் இந்த மன்றத்தை நிர்மானித்து தாங்கள் அனைவர்களும் பல நல்ல பலனுள்ள பணிகளை செய்து வருவது அறிந்து மற்றட்ட மகிழ்ச்சி. இதனை கொண்டும் உங்கள் யாவருக்கும் வல்ல அல்லாஹ் நாளை மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை தருவான். மேலும் இன்று இந்த நாட்டில் நிலவும் சூழ்நிலை கொண்டும், யாரும் எதுவும் யோசிக்க வேண்டியதில்லை, இறைவன் ஒரு வழியை அடைத்தால், மறு நல்ல வழியை காட்டுவான். இறைவன் அவரவருக்கு எழுதப்பட்டு இருக்கும் ரிஜ்க் தரப்படாமல் மொவுத் ஆக்கப்படுவதில்லை. ரிஜ்க் நிறைவுற்றதுமே மொவுத் வருகிறது. ஆகையால் அல்லாஹ்வின் நம்பிக்கையைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். வல்ல ரஹ்மான் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன். என்று எடுத்துக்கூறி பின்னர் ஜும்மா தொழுகையை வழிநடத்தினார்கள்.
மதிய சாப்பாடு:
ஜும்மா நிறைவுற்றதும், மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டு சுவைமிகுந்த மட்டன் பிரியாணி, வறுத்த சிக்கன் மற்றும் தித்திக்கும் கேரட் ஹல்வா பரிமாறப்பட்டது. முதலில் பெண்கள், மழலைகள் பந்தி பரிமாறும் வேளையில், உள்ளரங்கில் பெரும்பாலனவர்கள் பங்கு பெற்று கலந்து கொண்ட இசைப் பந்து சுற்று விளையாட்டு ஆரம்பமானது. ஒருவர் பின் ஒருவராக பந்து கடத்தப்பட வேண்டும், இசை நிறுத்தப்படும் போது, பந்து யார் கையில் உள்ளதோ அவர்கள் வெளியேற்றப்படும், என்ற நிபந்தனையுடன் மூன்று பந்துகள் கொடுக்கப்பட்டு போட்டி மிக ஆரவாரமாக ஆரம்பமானது. இசை நிறுதப்பட்டதும் மூன்று, மூன்று பேராக வெளியேறினர். வந்திருந்த அனைவருக்கும் நம் காயல் மண்ணில் இருந்தது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை அங்கே உணரமுடிந்தது.
உணவு ஏற்பாடு, பரிமாறுதல் சகோ எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் தலைமையில் சகோதரர்கள் பிரபு எஸ்.ஜே. நூர்தின் நெய்னா, வி.எஸ்.எச்.முத்து மொஹ்தூம், கேவி.எம்.எஸ். செய்யது முஹிய்யதீன், ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர்.
சாப்பாடு பரிமாறப்பட்டு உண்டு முடித்தபின், “உணவு உணரு” என்ற தலைப்பின்கீழ் காணொளி காட்சி மூலம் மன்றத்தின் தலைவர் குளம் எம்.ஏ அஹ்மது முஹைதீன் நல்ல பல உணர்வு பூரணமான எந்த உணவு சிறந்தது, எது கெடுதி என்றும், நமதூர் பாரம்பரிய உணவு களரி சாப்பாடு மண் சிட்டியில் பரிமாறப்பட்டு வந்ததும். உலகெங்கும் இல்லாத பழக்கம், கறியில் நம் முன்னோர்கள் வாழைக்காய் போட்டு சமைப்பது எதனால் என்றும், தேங்காய் நம் ஊரில் அதிகம் பயன் படுத்துவதும், அதனால் ஏற்படும் பயனும், என்று மிக அறிவுப் பூரணமான நல்ல விளக்கங்களை தந்து, உறுப்பினர்கள், மங்கையர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அழகான விளக்க உரை தந்தார். இது வந்திருந்த அனைவர்களுக்கும் மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது.
மாலை 04:30 மணியளவில் கூட்டாக அசர் தொழுகை நிறைவேற்றிய பின் தேனீர், மிச்சர் வழங்கப்பட்டது. அதன் பின் வெளியரங்க விளையாட்டு ஆரம்பமானது. 06 பேர் கொண்ட 08 குழுக்கள் பிரிக்கப்பட்டு கால்பந்து விளையாட்டு ஒரு குழுக்கு 05 நிமிடம் ஒதுக்கி போட்டி ஆரம்பமாகியது, மிக சுறுப்பான இந்த போட்டியில் மக்கா டீம் வெற்றி கொண்டது. மஃக்ரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து மிக ஆவலுடன் எதிர் பார்த்த யான்பு சகோ. ஆதம் சுல்தான் அவர்கள் ஏற்பாட்டில் “உரி அடிக்கும் போட்டி, உடனடி பரிசு, காயல் தோழர்களே வாருங்கள்” என்று அழைக்க, உற்சாக துள்ளலில் ஓடி வந்த இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்டு போட்டியில் இறங்கினர். போட்டி களை கட்டியது. பானைக்கு பதில் பலூன். ஊசிமுனை கொண்ட கம்பைக்கொண்டு கட்டப்பட்டிருக்கும் பலுனை உடைப்பது. பலர் பல திசை நோக்கி சென்றனர். மிக வேடிக்கையாகவும், ஆனந்த துள்ளலும் கரைபுரண்டு ஓடியது. இறுதியில் மக்கா சகோ. ஒய்.எம்.ஸாலிஹ் வெற்றி கண்டார்.
போட்டிகள் முடிந்த பின் 08:30 மணியளவில் இஷா தொழுகையை கூட்டாக நிறைவேற்றிய பிறகு சகோ. எம்.ஏ.அபுல்ஹசன் “மாத்தியோசி” என்ற கலகலப்பான போட்டியை நடத்தினார். இதில் கொடுத்த கால அவகாசத்தில் நல்ல திறம்பட பேசி முதல் பரிசை தட்டிச் சென்றார். சகோ. ஆதம் சுல்தான். நகைச்சுவை கலந்து தடுமாறாமல் பேசி இரண்டாவது பரிசை பெற்றுக்கொண்டார். சகோ. பாளையம் நஜ்ஜார்.
போட்டிகள் நிறைவுற்றதும் மிக சுருக்கமாக 39-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம்:
இந்த 39- வது பொதுக்குழுவை மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமை ஏற்று நடத்த, சகோ.சட்னி. எஸ்.எம்.முஹம்மது லெப்பை புதல்வன் இளவல் எம்.எல். செய்து மீரான். கிராஅத் ஓதிட சகோ. ஆதம் சுல்தான், சகோ.கமால் ஹாதி, சகோ.எஸ்.எச்.அப்துல்காதர், சகோ. எஸ்.எஸ்.ஜாபார் ஸாதிக், சகோ.பொறியாளர் நெய்னா, மன்றச்செயலாளர்கள் சகோ எம்.ஏ.செய்யது இபுறாகிம், சகோ எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும் சகோ. கலவா முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை சகோ. எம்.டபிள்யூ.ஹாமித் ரிஃபாய் தொகுத்து வழங்கினார்.
அடுத்து சகோ. கவிஞர் ஏ.ஆர்.ஜாஹிர் ஹூஸைன் கவியில் உருவான, அழகான முத்தான இஸ்லாமிய பாடல் ஒன்றை சகோ.எம்.எஃப்.யாக்கூத்துல் அர்ஸ். தனது இனிய குரலில் அழகாக பாடினார்.
தலைமையுரை:
இந்த பொதுக்குழு சிறப்பாக நடை பெறுவதற்கு பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் தன் அகங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இம்மன்றம் சிறப்பாக நல்ல பல பணிகளை தொடர்ந்து ஊர் மக்களுக்கு செய்திட தாங்கள் யாவர்களும் சந்தா மற்றும் நன்கொடைகளை நிதியாக தந்து பணி நிறைவேற ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டு தனதுரையை நிறைவு செய்தார்.
சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹியதீன்.
சிறப்புரை:
இந்த மாமன்றத்தின் நல்ல நோக்கம், குறிக்கோள், கோட்பாடுகள் ஆற்றிவரும் பணிகள், சொல்லி கொண்டே போகலாம். அப்படி சேவைகள் ஆற்றி வருகின்றார்கள் என்பதை இங்கு வந்து காணும்போதெல்லாம் நன்றாக உணரமுடிகிறது. எனவே இந்த நல்ல காரியத்திற்கு இது போன்று நாம் எல்லோரும் உதவ முன்வரவேண்டும். எனவே நம் மக்களுக்காக ஆற்றி வரும் இம்மன்றத்தின் பல சேவைகளுக்கு வல்ல அல்லாஹ் மிக சிறந்த நற்கூலியை தருவான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மன்றத்தின் சேவை தொடர வேண்டும் பல பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும் என்று வாழ்த்தி துஆ செய்து தனதுதுரையை நிறைவு செய்தார் மன்ற ஆலோசகர் யான்பு சகோ.எம்.ஏ.ஆதம் சுல்தான்.
நிதி நிலை அறிக்கை:
பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் உறுப்பினர்களின் சந்தா வந்த தொகைகளின் நல்ல தகவல்களையும் பரிமாறி, சென்ற பொதுக்குழுவில் நாம் பெற்ற தொகை, மேலும் இப்பொழுது வரவேண்டிய மற்றும் பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் இது வரை நம் ஊர் வறியவர்களுக்கு, முடிவு செய்து வழங்கப்பட்ட மொத்த தொகைகள் போன்ற முழு விபரங்களையும், வரவு செலவு விபரத்தையும், மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் நிதி நிலை அறிக்கையாக தந்து கொண்டார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அதனை அடுத்து புதியதாக சவுதி வந்து, வேலையில் சேர்ந்த நமதூர் சகோதரர்கள் இம்மன்றத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இப்பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்களாக ஒவ்வொருவராக வந்து தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.
நன்றியுரை:
குடும்ப சங்கம விழாவாக நடைபெற்ற இனிய இந்நிகழ்விற்கு அயராது பாடுபட்டு உழைத்த அன்பு சகோதரர்கள் அனைவர்களுக்கும், உணவு வகைகளுக்கு, குடிநீர், தேனீர், மிச்சர் மற்றும் தின்பண்டம், பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்கு தாரளமாக அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், மக்கா, மதீனா, யான்பு மற்றும் ஜித்தாவிலிருந்து வந்து பெருந்திரளாக கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சகோ.பிரபு எஸ்.ஜே. நூர்த்தீன் நெய்னா மன்றத்தின் சார்பாக தனது நன்றி கலந்த பாராட்டுக்களை கூறி நிறைவு செய்தார்.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், ஆண்களுக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர். இறுதியாக குலுக்கல் முறையில் பம்பர் பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக மக்கா ஹில்டன் கன்ராட் (Conrad Makkah) என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்கும் அரியதோர் வாய்ப்பை சகோ. வி.எம்.எ.மொஹ்தூம் அமீன் மற்றும் பொறியாளர் அல்ஹாபிழ் எம்.எம்.எஸ்.ஷாஜஹான் ஆகிய இருவர் பெற்றுக்கொண்டார்கள். முன்னிலை வகித்தவர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
பிரார்த்தனை:
சகோ.எஸ்.எஸ்.ஜாபர் ஸாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இரவு உணவு:
சரியாக இரவு 09:45 மணியளவில் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றதும், அனைவருக்கும் இரவு உணவு கோழிக்கறி, ரொட்டி மற்றும் ரவை உப்புமா பரிமாறப்பட்டது. மனம் நிறைந்த சந்தோசத்துடன், இந்த நாள் மீண்டும் வரவேண்டும் என்று வேண்டியவர்களாக பிரிந்து சென்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர்கள் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது, சகோ.எம்.எஸ்..எல்.முஹம்மது ஆதம், சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ சோல்ஜர் எஸ்.டி.செய்கு அப்துல்லாஹ், சகோ அல்ஹாபிழ்.எம்.ஏ.சி.ஷா மீரான் சாஹிப் மற்றும் சகோ அல்ஹாபிழ், எஸ்.ஐ..ஸல்மான் பாரிஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் 110-ஆவது செயற்குழு கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 16- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணிக்கு வழமைப்போல் இம்பாலா கார்டனில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ..சட்னி எஸ்.ஏ.கே,செய்யது மீரான், சகோ. எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம், சகோ.சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி, சகோ.செய்து முஹம்மது ஷாதுலி மற்றும் சகோ பொறியாளர் அல்ஹாபிழ்,எம்.ஹச்.முஹம்மது அலி ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
09.02.2018.
|