காயல்பட்டினம் நஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு - அதில் சிறுமியருக்கு மார்க்கக் கல்விச் சேவையாற்றி வரும் 3 மத்ரஸாக்களுக்கு நஹ்வியப்பா நினைவு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், நஹ்வியப்பா தைக்காவைச் செயல்களமாகக் கொண்டு இயங்கி வருகிறது நஹ்வியப்பா நற்பணி மன்றம். இதன் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, மஹான் நஹ்வியப்பா நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், நிகழும் பிப்ரவரி மாதம் 09, 10 (ஹிஜ்ரீ 1439, ஜமாதியுல் அவ்வல் 22, 23) வெள்ளி , சனி ஆகிய இரு நாட்களில், சொளுக்கார் தெருவில் நடைபெற்றது.
09.02.2018. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், சொளுக்கார் தெரு நஹ்வியப்பா திடலில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத் தலைமையேற்க, மார்க்க அறிஞர்களும், பிரமுகர்களும் முன்னிலை வகித்தனர். ஹாமிதிய்யா மாணவர் எஸ்.எஸ்.இம்தியாஸ் மவ்லானா கிராஅத் ஓதினார். சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, “நபி பெருமானாரின் நற்குணங்கள்” எனும் தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
அன்று 19.00 மணிக்குத் துவங்கிய அடுத்த அமர்வில், நபிகள் நாயகம் புகழ்பாடும் நஃத் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. செ.இ.முஹம்மத் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா மாணவர் எச்.கே.எம்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதினார்.
துவக்கமாக, நபிகள் நாயகம் புகழ்பாடும் பைத்துகளும், தொடர்ந்து மஹான் அல்லாமா நஹ்வீ ஆலிம் அவர்களின் புகழ்பாடும் விர்துகளும் - காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா தலைமையில் ஓதப்பட்டன.
எஸ்.ஏ.காஜா முஈனுத்தீன் நன்றி கூற, மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடன் துவக்க நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிறைவு நாளான 10.02.2018. சனிக்கிழமையன்று 06.30 மணிக்கு, மகளிர் பங்கேற்ற கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், நஹ்வியப்பா பெண்கள் தைக்காவில் நடைபெற்றது. ஆண்களுக்கு குருவித்துறைப் பள்ளியில் நடைபெற்றது. அதன் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தலைமையேற்று நடத்திட, அதன் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அன்று 16.45 மணிக்கு, நஹ்வியப்பா திடலில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் நபிகளார் புகழ்பாடும் புர்தா மஜ்லிஸ் நடத்தப்பட்டது. ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையேற்க, மக்தபத்துன் நஹ்விய்யா மாணவர் எம்.என்.டீ.ஜமீல் ஸிராஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தாயிம் பள்ளி இமாம் ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் வரவேற்றார்.
தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்கள் புர்தா மஜ்லிஸை நடத்தினர். ‘காக்கும் கரங்கள்’ அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் நன்றி கூற, சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ துஆவுடன் அவ்வமர்வு நிறைவுற்றது.
அன்று 19.00 மணிக்குத் துவங்கிய நிறைவு அமர்விற்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமை தாங்கினார். அதன் மாணவர் ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத் கிராஅத் ஓதினார். ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வரவேற்றார்.
தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.இம்தாதுல்லாஹ் ஃபாழில் பாக்கவீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ - மஹான் அல்லாமா நஹ்வியப்பா அவர்களின் வரலாற்றுச் சரித உரையாற்றினார்.
முதல் நாளில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுமியருக்கு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிக்கும் சேவையைப் பல்லாண்டுகளாகச் செய்து வரும் முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் (பெரிய கல் தைக்கா), ரவ்ழத்துல் ஜன்னஹ் இளம் மாணவியர் இஸ்லாமிய கல்விக் கூடம் (அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி, தீவுத்தெரு பெண்கள் தைக்கா), அலியார் தெரு கவ்த் முஹ்யித்தீன் பெண்கள் தைக்கா ஆகிய மூன்று மத்ரஸாக்களுக்கு, “நஹ்வியப்பா நினைவு விருது”கள் வழங்கப்பட்டன. நகரப் பிரமுகர்கள் வழங்க, அந்தந்த மத்ரஸாக்களின் ஆண் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, நஹ்வியப்பா நற்பணி மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளையும் – ஹாஃபிழ் டபிள்யு.இசட்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் நெறிப்படுத்தினார். நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல் உதவி & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.ஈஸா ஷஃபீக் |