காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மீது புதுிதாக வரி திணிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் மூலமாக குப்பைகளை அள்ளுவதற்கு என துணை விதிகள், கடந்த ஆண்டு - மார்ச் மாதம் முன்மொழியப்பட்டது. மக்கள் பிரிதிநிதிகள் இல்லாத சூழலில், பொது மக்கள் மீது நகராட்சி - புதிய வரியினை திணிக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பல்வேறு வரிகளை செலுத்திவரும் பொது மக்கள் மீது விதிக்கப்படும் தேவையற்ற வரி இது என்றும், நடப்பது என்ன? குழுமம் மூலமாக, நூற்றுக்கணக்கான பொது மக்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு, உடனடியாக ஆட்சேபனை கடிதம் வழங்கப்பட்டது.
இருப்பினும் - இந்த ஆட்சேபனையை பரிசீலனைக்கு எடுக்காமல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் - தன்னிச்சையாக இந்த வரியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய துணைவிதிகளை அறிமுகப்படுத்த மக்களால் தேர்வு செய்யப்பட, நகர்மன்றத்திற்கே - தார்மீக உரிமை உண்டு. உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடக்காத சூழலை பயன்படுத்தி, புதிய வரியை நகராட்சி - அறிமுகப்படுத்தியுள்ளது ஏற்புடையதல்ல.
தனி அலுவலர் என்ற அடிப்படையில், ஆணையருக்கு - நகர்மன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், புதிய வரிகள் விதிப்பு போன்ற விஷயங்களில் - பொது மக்கள் கருத்துப்படியே அவர் செயல்புரியவேண்டும்.
இந்த துணைவிதிகளை நகராட்சி மூலமாக வெளியிட்டபோது பொது மக்களில் எவரும் அதற்கு ஆதரவு தெரிவிக்காத சூழலில், தன்னிச்சையாக இந்த வரியை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிமுகம் செய்துள்ளது - வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.
மேலும் - இந்த புதிய வரியை அறிமுகப்படுத்த, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 310 தெரிவித்துள்ள விதிமுறைகளையும், வழிமுறைகளையும் காயல்பட்டினம் நகராட்சி பின்பற்றவில்லை.
எனவே - விதிமுறைகளை மீறி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை, உடனடியாக ரத்து செய்யும்படி அரசினை கேட்டுக்கொள்கிறோம். இது சம்பந்தமான மனு, இன்று - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 20, 2018; 7:45 am]
[#NEPR/2018022001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|