காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. இது சம்பந்தமாக பல மாதங்களாக, நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் பணிகள் செய்யப்படும் என்ற பொய்யான தகவல் மட்டும் பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கள் தடுக்க இரு இடங்களில் வேக தடைகள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டும், இது வரை அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட மனு அடிப்படையில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சிறு பகுதி மட்டும், திருச்செந்தூர் சாலை துவக்கத்தில் சரிசெய்யப்பட்டது. ஒரு சிறு பகுதியை சீரமைக்க ஆறு லட்சம் ரூபாய் செலவு என்பது வேடிக்கையான விஷயமாகும். அதனை தொடர்ந்து பிற இடங்களிலும், புனரமைப்பு நடக்கும் என எதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பேருந்து நிலையம் அருகில், தபால் நிலையம் அருகில் மற்றும் அஜ்ஹர் ஜும்மா பள்ளி சந்திப்பில் - நெடுஞ்சாலை, கடுமையாக பழுதடைந்துள்ளது. இவ்விடங்களில் - அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்துள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்யாத பட்சத்தில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும்; கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிமடுக்காத சூழலில், நீதிமன்ற கதவுகளை மக்கள் தட்டவேண்டிய சூழல் எழும் என தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம்,நடப்பது என்ன? குழுமம் சார்பாக நேற்று மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 20, 2018; 12:00 pm]
[#NEPR/2018022004]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |