காயல்பட்டினம் நகராட்சியை விட தமிழகத்திலுள்ள பல நகராட்சிகள் குறைந்த அளவிலேயே சொத்து வரியை உயர்த்தியுள்ளன. இதுகுறித்து, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை:-
ஒரு நகராட்சியின் முக்கிய வருமானங்களில் ஒன்று சொத்துவரி (PROPERTY TAX). 2016-2017 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - 72 லட்சத்து, 9 ஆயிரத்து, 752 ரூபாய் - சொத்து வரியாக வசூல் செய்யப்பட்டதாக, தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை (QUINQUENNIAL REVISION) இந்த வரி உயர்த்தப்படவேண்டும் என விதிமுறைகள் கூறினாலும் - தமிழகத்தில் கடைசியாக, 2008 ஆம் ஆண்டு (நகராட்சிகளில்) சொத்து வரி உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் சொத்துவரியினை உயர்த்திடக்கூறி - தமிழக அரசு, இரு அரசாணைகளை, ஜூலை மாதம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் - தற்போது, சொத்துவரியினை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
காயல்பட்டினம் நகராட்சி சார்பாக, செப்டம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைப்படி, சொத்து வரி குறித்து - கீழ்காணும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(1) நகரின் பல்வேறு பகுதிகள் - அவற்றின் தகுதிகள் அடிப்படையில், மண்டலம் A, B, C என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் - ஏற்கனவே B மண்டலத்தில் இருந்த பல பகுதிகள் A மண்டலத்திற்கும், C மண்டலத்தில் இருந்த பல பகுதிகள் B மண்டலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது.
(2) சதுர அடிக்கு 50 பைசா என இருந்த A மண்டல அடிப்படை வரி - 150 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது; முன்பிருந்த அடிப்படை வரியை விட - இது 200 சதவீதம் அதிகம்
(3) சதுர அடிக்கு 25 பைசா என இருந்த B மண்டல அடிப்படை வரி - 80 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது; முன்பிருந்த அடிப்படை வரியை விட - இது 220 சதவீதம் அதிகம்
(4) சதுர அடிக்கு 19 பைசா என இருந்த C மண்டல அடிப்படை வரி - 60 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது; முன்பிருந்த அடிப்படை வரியை விட - இது 215 சதவீதம் அதிகம்
அடிப்படை வரி - 200 சதவீதத்திற்கு அதிகமாக கூடியிருந்தாலும், முந்தைய வரித்தொகையை விட - குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கு கூடுதலாகவும், குடியிருப்பு இல்லாத இனங்களுக்கு 100 சதவீதத்திற்கு கூடுதலாகவும் வரி உயர்த்தப்படாது என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் அல்ல.
தற்போதைய சொத்து வரி உயர்வு - சுய மதிப்பீட்டு படிவத்தை (SELF ASSESSMENT FORM) அடிப்படையாக கொண்டது என நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையரின் 20-8-2018 தேதிய சுற்றறிக்கை (ROC.NO.20555/2018/R1) தெளிவாக கூறுகிறது. இந்த படிவத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் (வீடுகளின் பரப்பளவு, வயது, தன்மை) விளைவாக, சொத்துவரி செலுத்தும் ஏறத்தாழ அனைவரையும் இந்த 200 சதவீதத்திற்கும் கூடுதலான வரி உயர்வு பாதிக்கும் சூழல் உள்ளது என்பதே நிதர்சன உண்மை.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த காலங்களில், பிற நகராட்சிகளுடன் ஒப்பிடும்போது குறைவான வரியே வசூல் செய்யப்பட்டதாகவும், எனவே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உயர்வு நியாயமானது என்றும் நகராட்சியின் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல.
தமிழகத்தில் சுமார் 125 நகராட்சிகள் உள்ளன; அதில் 40 க்கும் மேற்பட்டவை, காயல்பட்டினம் நகராட்சி போல, இரண்டாம் நிலை நகராட்சிகள் ஆகும். 40க்கும் மேற்பட்டுள்ள இரண்டாம் நிலை நகராட்சிகளில், 22 நகராட்சிகளில் தற்போது எவ்வாறு வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மெகா | நடப்பது என்ன? குழுமம் ஆய்வுகள் மேற்கொண்டது.
அதில் கிடைக்கப்பட்ட விபரங்கள்படி, காயல்பட்டினம் நகராட்சியில் மண்டலம் A பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அடிப்படை வரியான சதுர அடிக்கு 150 காசு தொகையை விட, குறைந்தது 6 நகராட்சிகள் குறைவாகவே - நிர்ணயம் செய்துள்ளன என கண்டறிய முடிந்தது.
:: காயல்பட்டினம் ::
மண்டலம் A - 150 காசு; மண்டலம் B - 80 காசு; மண்டலம் C - 70 காசு
:: கூடலூர் (மதுரை) ::
மண்டலம் A - 120 காசு; மண்டலம் B - 100 காசு; மண்டலம் C - 80 காசு
:: கீழக்கரை ::
மண்டலம் A - 120 காசு; மண்டலம் B - 90 காசு; மண்டலம் C - 60 காசு
:: மேலூர் ::
மண்டலம் A - 135 காசு; மண்டலம் B - 105 காசு; மண்டலம் C - 75 காசு
:: ஒட்டன்சத்திரம் ::
மண்டலம் A - 110 காசு; மண்டலம் B - 90 காசு; மண்டலம் C - 80 காசு
:: ராமேஸ்வரம் ::
மண்டலம் A - 140 காசு; மண்டலம் B - 120 காசு; மண்டலம் C - 110 காசு
:: வேதாரண்யம் ::
மண்டலம் A - 135 காசு; மண்டலம் B - 100 காசு; மண்டலம் C - 60 காசு
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில், சட்டத்திற்கு புறம்பான முறையில் கடந்த ஆண்டு - குப்பைவரி அறிமுகம் செய்யப்பட்டது; அதன் தொடர்ச்சியாக, தற்போது - சொத்துவரியினை அதிகளவில் - உயர்த்திட முயற்சிகள் செய்யப்படுகிறது. தற்போது, நகராட்சி உயர்த்தியுள்ள சொத்துவரி விகிதாச்சாரம் ஏற்புடையதல்ல.
பொதுமக்களின், பொதுநல அமைப்புகளின் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி - வரியினை அளவுக்கு அதிகமாக உயர்த்தும் திட்டத்தினை கைவிடவேண்டும்.
பொதுமக்களின் இந்த கோரிக்கையை நகராட்சி ஏற்காத வரை, சுய மதிப்பீடு படிவங்களை, பொதுமக்கள் - நகராட்சியிடம் வழங்கவேண்டாம் என மெகா | நடப்பது என்ன? குழுமம், மீண்டும் வலியுறுத்துகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 25, 2018; 10:30 am]
[#NEPR/2018102501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|