காயல்பட்டினத்தில் இ பொதுசேவை மையத்தை மீண்டும் அமைத்திட பேருந்து நிலைய வளாகம் பொருத்தமான இடம் என கள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலறிக்கை:-
2015 ஆம் ஆண்டு முதல், காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் இயங்கிவந்த இ சேவை மையம் - திடீரென கடந்த மாதம், காயல்பட்டினத்தில் இருந்து மாற்றப்பட்டது.
காயல்பட்டினத்தில் இயங்கி வந்த இ சேவை மையம் மூலம் குறைந்த வருமானம் ஈட்டப்படுவதாக காரணம் கூறப்பட்டு, இந்த இசேவை மையம் - புதிதாக துவக்கப்பட்ட ஏரல் தாலுகாவிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களை, நடப்பது என்ன? குழுமம் - செப்டம்பர் 17 அன்று நேரடியாக சந்தித்து - இதற்கான ஆட்சேபனையை தெரிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் -
தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு செயலர் (Secretary to Government) டாக்டர் சந்தோஷ் பாபு IAS
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேலாண்மை இயக்குனர் (Managing Director) திரு ஜான் லூயி IAS
Tamilnadu e-Governance Agency ஆணையர் / மேலாண்மை இயக்குனர் (Commissioner / MD) திரு சந்தோஷ் மிஸ்ரா IAS
ஆகியோரிடம், இது சம்பந்தமான மனுக்கள் வழங்கப்பட்டது.
மீண்டும் இது குறித்து நினைவூட்டும் விதமாக, தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு செயலர் (Secretary to Government) டாக்டர் சந்தோஷ் பாபு IAS அவர்களை, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சென்னையில் அக்டோபர் 10 அன்று சந்தித்தனர். விபரங்களை கேட்டறிந்த துறைச்செயலர், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜான் லூயிஸ் IAS அவர்களை தொடர்புக்கொண்டு பேசினார்.
அரசு செயலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், அக்டோபர் 11 அன்று - தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜான் லூயிஸ் IAS அவர்களை, அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
நகரின் உட்பகுதியில் (நகராட்சியின் அலுவலகத்தில்) இசேவை மையம் அமைந்தது - வருமான குறைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும், பேருந்து நிலையம் வளாகத்தில், இந்த மையத்தை அமைத்தால் - பொது மக்கள், அதிகளவில் இந்த மையத்தை பயன்படுத்துவர் என்றும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
விபரங்களை கேட்டறிந்த மேலாண்மை இயக்குனர், உடனடியாக - மீண்டும் இந்த இ சேவை மையத்தை காயல்பட்டினத்தில் துவங்கிட தான் ஏற்பாடு செய்வதாக அப்போது உறுதியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, திங்களன்று (அக்டோபர் 22) - தூத்துக்குடி மாவட்ட அரசு கேபிள் டிவி தாசில்தார் தலைமையிலான குழு, காயல்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள தற்போது ஆதார் மையம் செயல்புரிந்து வரும் கட்டிடத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டது. இந்த கள ஆய்வின் போது, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து - கள ஆய்வுகள் மேற்கொண்ட அதிகாரிகள், தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் -
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள எல்க்காட் ஆதார் சேர்க்கை மையம் இயங்கி வரும் கட்டிடத்தில் பார்வையிட்ட போது, 30 * 6 அடி அளவில் போதிய இடவசதியுடன், பொது மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் அமைந்துள்ளது.
மேலும் - மேற்படி இடத்தில, காயல்பட்டினம் நகராட்சி மூலம் மின்சாரம் வழங்கிடும் பட்சத்தில் மேற்படி இடம் பொது சேவை மையம் அமைத்திட ஏதுவாக உள்ளது.
- என தெரிவித்துள்ளனர்.
இந்த இசேவை மையம் மீண்டும் காயல்பட்டினத்தில் அமைந்திட ஒத்துழைத்து அதற்கான அனுமதியை வழங்கிட - நடப்பது என்ன? குழுமம், காயல்பட்டினம் நகராட்சியினை கேட்டுக்கொண்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 26, 2018; 10:00 am]
[#NEPR/2018102601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|