நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, சிங்கப்பூர்வாழ் காயலர்கள் ஒருங்கிணைந்து, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
காலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய அவர்கள், அன்று இரவு 7 மணிக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் ஒன்றுகூடினர்.
துவக்கமாக மஃரிப் தொழுகையும், அதனைத் தொடர்ந்து இஷா தொழுகையும் கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி துவங்கியது. எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ரமழான் - நோன்பின் முக்கியத்துவம், இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் நோன்பாளிகளுக்கு வழங்கும் நற்கூலிகள் குறித்தும், ரமழானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் நோற்கப்பட வேண்டிய 6 ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்தும், சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் சுருக்கவுரையாற்றினார்.
இறுதியாக, சிங்கப்பூர் மஸ்ஜித் ஜாமிஆ சுலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றியையும், பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர், காயலர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி (முஸாஃபஹா செய்து) தமக்கிடையில் பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, மன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் ஒரு வெற்றுரையை (என்வெலப்) வழங்கினார். உறுப்பினர்கள் தமது விருப்பத்தொகையை பெருநாள் நன்கொடையாக அந்த உறையினுள் வைத்து, அவரிடம் ஒப்படைத்தனர்.
காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு இரவு உணவாகப் பரிமாறப்பட்ட பின்னர், 11 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். ஆண்டுதோறும் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை தம் பொறுப்பில் செய்துவரும் மன்றத் தலைவருக்கு அவர்கள் யாவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தகவல் மற்றும் நிழற்படங்கள்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |