ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையில் நடைபெறும் அபூர்வ துஆ பிரார்த்தனை, மஹ்ழரா கந்தூரி ஆகிய தினங்களில், மாலையில் கடற்கரையில் முஸ்லிம்கள் பெருந்திரளாக காயல்பட்டினம் கடற்கரையில் சங்கமிப்பர்.
துவக்க காலத்தில் பெண்கள், தமதில்லங்களுக்கருகேயுள்ள தைக்காக்களையொட்டி இருந்த - ‘தைக்கா வெட்டை‘ என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பில் ஆண்கள் கலப்பின்றி கூடியமர்ந்து, தமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதும், அங்கே சுட்டு விற்கப்படும் வடை, பஜ்ஜி, ஊறுகாய் உள்ளிட்டவற்றை வாங்கி கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வழமையாக இருந்தது.
தற்போது காயல்பட்டினத்தில் வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரின் பல பகுதிகளிலிருந்த இதுபோன்ற தைக்கா வெட்டைகள், வீடுகளோடு ஒட்டியிருந்த பெரும்பாலான தோட்டங்கள் அழிக்கப்பட்டு, அடுக்கு மாடிக்கட்டிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
இந்நிலையில், காயல்பட்டினம் கடற்கரை, கடந்த நகர்மன்ற நிர்வாகத்தால், சில ஆண்டுகளுக்கு முன் அழகுபடுத்தப்பட்டபோது, எஞ்சியிருந்த தைக்கா வெட்டைகளில் பெண்கள் கூடுவதும் நின்றுபோய், பெண்கள் அனைவரும் கடற்கரையில் சங்கமிக்கத் துவங்கினர். அன்று தொட்டு இன்று வரை இந்நிலை நீடித்து வருகிறது.
காயல்பட்டினத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் விசேஷ தினங்கள் மட்டுமின்றி, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட இந்து, கிறிஸ்துவ விசேஷ தினங்களின்போதும் காயல்பட்டினம் கடற்கரையில் அந்தந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் திரள்வதும் கடற்கரை அழகுபடுத்தப்பட்ட பின்னர் வழமையாகிவிட்டது.
பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடுகிறபோதிலும், இன்று வரை பெரிய அளவில் எவ்வித அசம்பாவித நிகழ்விற்கும் இடமளிக்காமல் இருப்பது காயல்பட்டினம் மக்களின் சமூக நல்லிணக்கப் புரிந்துணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
நடப்பாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, காயல்பட்டினம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். மக்கள் திரட்சியைக் கருத்தில் கொண்டு பல வியாபாரிகளும் அங்கே சங்கமித்தனர்.
கடந்த காலங்களில் இருந்ததைப் போல, கடற்கரை சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து நெரிசலின்றி தவிர்த்திடும் பொருட்டு இருசக்கர வாகனங்களை சொளுக்கார் தெருவோடும், நாற்சக்கர வாகனங்களை கொச்சியார் தெருவோடும் நிறுத்தி, போக்குவரத்தை சீர்செய்து தருமாறு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி - YUF சார்பில், ஆறுமுகநேரி காவல்துறை உதவி ஆய்வாளர் பார்த்திபனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், ஆறுமுகநேரி காவல்துறையினர் காயல்பட்டினம் கடற்கரை, கொச்சியார் தெரு முனை, சொளுக்கார் தெரு முனை, அப்பாபள்ளித் தெரு முனை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசல் முனை என பல இடங்களில் நின்று, போக்குவரத்தை சரிசெய்தனர்.
|