ரமழான் மாதத்தையடுத்த ஷவ்வால் மாதத்தில் 6 தினங்கள் நோன்பு நோற்பது, அந்த வருடம் முழுக்க நோன்பு நோற்ற நன்மைக்குரியதாகும் என இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ரமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு, பருவமடைந்த ஆண் - பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டதாகும். அதனையடுத்த ஷவ்வால் மாதத்தில் நோற்கப்படும் இந்த ஆறு நோன்புகள் அவரவர் விருப்பத்திற்குட்பட்டதாகும். நோற்றால் நன்மையுண்டு. நோற்காவிடில் கேள்வியில்லை.
ஆர்வப்படும் முஸ்லிம்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் பேணிக்கையுடன் நோற்பர். அந்த அடிப்படையில் காயல்பட்டினத்திலும் இம்மாதத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆறு நோன்பு நோற்பது வழமை.
கடந்த காலங்களில், ரமழான் மாதத்தில் நோற்கப்படும் இருபத்தொன்பது அல்லது முப்பது நோன்புகளின்போது மட்டுமே பள்ளிவாசல்களில் ஒருங்கிணைந்த இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காயல்பட்டினத்தின் பல பள்ளிவாசல்களில், ஷவ்வால் உபரி நோன்புகளுக்காகவும் இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இன்று ஷவ்வால் முதல் நாளையொட்டி பொதுமக்கள் நோன்பு நோற்றிருந்தனர். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 75 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற தூத்துக்குடி உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். அவர்களுடன் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினரும், நகர தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளருமான மும்பை முகைதீன், இல்லங்குடி, இளந்தளிர் முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களை, முஹ்யித்தீன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பள்ளிவாசல் நிர்வாகிகளான ஹாஜி எம்.எம்.சுல்தான், ஹாஜி தாஜுத்தீன், ஹாஜி எம்.டி.ஷெய்க் முஹம்மத், ஹாஜி வி.என்.எஸ்.காதிர், ஹாஜி புகாரீ மவ்லானா, பழம்பாக்கு ஹாஜி அபுல்காஸிம், ஹாஜி நோனா அபுல்காஸிம், எஸ்.டி.கமால், பள்ளிவாசல் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் துணைத்தலைவர் பேராசிரியர் சதக்கு தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முஹ்யித்தீன் பள்ளி ஜமாஅத்தார் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 75 பேர் இந்த நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வெண்கஞ்சி, வடை, பழக்கூழ், தேனீர் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
|