சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை மட்டுமே நடத்தப்படுவதும், குத்பா பேருரை இரண்டு ஜும்ஆ பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படுவதும் வழமையாக இருந்தது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், ஜமாஅத்தாரில் ஒரு பகுதியினர் குத்பா சிறிய - பெரிய பள்ளிவாசல்களுக்கும், மற்றொரு பகுதியினர் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கும் நகரா (அடித்து) இணைந்து சென்று குத்பாவில் பங்கேற்பது பல ஆண்டுகளாக நடந்து வந்த்து.
பொதுமக்கள் வசதியைக் கருதி பெருநாள் தொழுகை காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுவதால், அதற்குப் பிறகு அனைத்துப் பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் குத்பா நடைபெறும் ஜும்ஆ பள்ளிகளுக்குச் சென்று குத்பாவில் கலந்துகொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும், பலர் குத்பாவில் கலந்துகொள்ளாமலேயே தம் இல்லங்களுக்குச் சென்றுவிடுவதைக் கருத்தில் கொண்டும், குருவித்துறைப் பள்ளி, ஆறாம்பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அந்தந்த பள்ளியிலேயே தொழுகையும், குத்பா உரையும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் குருவித்துறைப் பள்ளியில் நேற்று (10.09.2010) பெருநாளன்று காலை 10 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையைத் தொடர்ந்து குத்பா பேருரை நடைபெற்றது. தொழுகை மற்றும் குத்பா உரையை, ஐக்கிய சமாதான அறக்கட்டளையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ நடத்தினார்.
தொழுகை நிறைவுற்றதும், ஜமாஅத்தார் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி (முஸாஃபஹா செய்து) தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், தொழுகை மற்றும் குத்பா நடத்திய கத்தீபை, பள்ளிவாசலிலிருந்து நகரா அடித்தவாறு அழைத்துச் சென்று, மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா வலிய்யுல்லாஹ், மஹான் செய்யித் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் ஆகியோரின் மறைவிடங்களில் ஜியாரத் (மண்ணறை சந்திப்பு) செய்தனர்.
|