வடஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்தது பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித்.
சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, ஹிந்து தீவிரவாத அமைப்புகளால் கடந்த 1992ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில், இப்பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நாற்பதாண்டு கால வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று, எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
இத்தீர்ப்பு நியாய அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - குத்பா சிறிய பள்ளிவாசலில், இன்று இரவு மஃரிப் தொழுகைக்குப் பின் ‘இஸ்திகாரா‘ எனும் சிறப்புத் தொழுகையும், அதனைத் தொடர்ந்து துஆ மஜ்லிஸ் எனும் கூட்டுப் பிரார்த்தனை அமர்வும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நகரின் அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அப்பள்ளியில் நேற்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகைக்குப் பின் அறிவிப்புச் செய்யப்பட்டது.
குத்பா பெரிய பள்ளிவாசலில் தொழுகை இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று வெளியிடப்பட்ட இச்செய்தி சிறுபள்ளி என்று திருத்தப்பட்டுள்ளது. |