வடஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்தது பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித்.
சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இன்றளவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, ஹிந்து தீவிரவாத அமைப்புகளால் கடந்த 1992ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில், இப்பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நாற்பதாண்டு கால வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று, எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
இத்தீர்ப்பு நியாய அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - குத்பா சிறிய பள்ளிவாசலில், இன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் ‘இஸ்திகாரா‘ எனும் சிறப்புத் தொழுகையும், அதனைத் தொடர்ந்து துஆ மஜ்லிஸ் எனும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
இஸ்திகாரா தொழுகையை அப்பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ வழிநடத்தினார்.
பின்னர், பாபரி மஸ்ஜித் வரலாறு, பாபரி மஸ்ஜிதுக்கெதிராக மதவாதிகள் செய்த சூழ்ச்சி, வழக்கு விபரங்கள் உள்ளிட்டவற்றை, காயல் அமானுல்லாஹ் விளக்கிப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, ஐக்கிய சமாதான அறக்கட்டளையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார். இஸ்லாமிய உலகத்தின் பார்வையில் பாபரி மஸ்ஜித் வழக்கு, இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது சுருக்கவுரை அமைந்திருந்தது. உரையைத் தொடர்ந்து அவர் கூட்டுப் பிரார்த்தனையை நடத்தினார்.
இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், வாவு வஜீஹா கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு மொஹுதஸீம், ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, குருவித்துறைப் பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் உட்பட அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|