ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. இந்த ஊர்வலத்தில், ஆறுமுகநேரி சுற்றுவட்டாரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 108 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காயல்பட்டினம் நகரை அமைதியாக கடந்து சென்றது.
இந்து எழுச்சிப் பேரணி என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஊர்வலத்தை, இந்து முன்னணி ஆறுமுகநேரி கிளைத் தலைவர் ராமசுவாமி துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம், ஜெயின்நகர், பேயன்விளை அழகாபுரி காயல்பட்டினம் இரத்தினபுரியை அடைந்தது.
பின்னர், காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு வளைவை மாலை 05.40 மணிக்கு அமைதியாகக் கடந்து சென்றது. பின்னர் மன்னர்ராஜா கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூருக்கு சென்றது.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கர், ஏடிஎஸ்பி ராஜராமன், ஏஎஸ்பி சோனல் சந்திரா, திருச்செந்தூர் டிஎஸ்பி அப்பாசாமி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் உட்பட ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
காயல்பட்டினத்தில், பிரதான வீதி அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனை, ஐக்கிய விளையாட்டு சங்க முனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் நகரை நெருங்கிய நேரத்தில், அவ்வழியே வந்த உள்ளூர் வாகனங்கள் வழி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
|