கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வணிகம் செய்கின்ற மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற காயலர்களை ஒருங்கிணைத்து, திருவனந்தபுரம் காயல் நல மன்றம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. இம்மன்றத்தின் இரண்டாமாண்டு பொதுக்குழுக் கூட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள மினா தோட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றச் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, பெருநாளையொட்டி காயல்பட்டினம் அருகிலுள்ள திருச்செந்தூரில் ஏதேனும் ஒரு தோட்டத்தில் நடத்துவதென துவக்கக் கூட்டத்தின்போதே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், மன்றத்தின் இரண்டாமாண்டு பொதுக்குழுக் கூட்டம் நேற்று (12.09.2010) காலை 10 மணிக்கு, திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமூலைக்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் ‘மினா கார்டன்‘ தோட்டத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.ஏ.தாஹா, ஹாஜி சுலைமான் (48), ஹாஜி தைக்கா சாமு, ஹாஜி எஸ்.ஒய்.நூஹ் ஸாஹிப், ஹாஜி எஸ்.ஒய்.பிச்சைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத் தலைவர் முஹம்மத் அப்துல் காதிர் என்ற மம்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மாணவர் யாஸர் அரஃபாத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். எம்.ஐ.முஹம்மத் நூஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, ஏ.எச்.ஃபாயிஸ் ரஹ்மான் இறைப்புகழ்ச்சிப் பாடல் பாடினார்.
மன்றத்தின் ஓராண்டு வரவு-செலவு கணக்கறிக்கையை ஹாஜி எம்.ஏ.சதக்கு தம்பி சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. மன்றம் துவக்கப்பட்டதிலிருந்து ஆற்றிய - இனி ஆற்றவிருக்கிற சேவைகள் குறித்தும், கடந்த கூட்ட தீர்மானங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்பட்டமை குறித்தும் ஹாஃபிழ் ஜே.ஏ.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர், காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வொர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்புரையாற்றினார். உலகளாவிய அளவில் காயல் நல மன்றங்கள் ஒருங்கிணைந்து நகர்நலப் பணிகளாற்ற வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நல்விளைவுகள், நகரில் புற்றுநோயாளிகள் உருவாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதற்காக உலக காயல் நல மன்றங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
முன்னதாக, மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கூட்டத்தின் துவக்கத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. குலுக்கல் முறையில் பத்து உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் லுஹர் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் ஜே.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
தொழுகையைத் தொடர்ந்து அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு மதிய விருந்தாகப் பரிமாறப்பட்டது.
பின்னர் மாலை அமர்வு துவங்கியது. திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இந்த அமர்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். காயல்பட்டினம் - திருவனந்தபுரம் இடையே தினசரி நேரடி பேருந்து சேவை இயக்கப்பட முழு முயற்சிகள் மேற்கொண்டமைக்காக அவருக்கு அப்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நேரடி பேருந்துகள் தொய்வின்றி இயக்கப்பட, காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வசதிகளை விரைவாகச் செய்து கொடுக்குமாறு அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. அவையனைத்தையும் செய்து தருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - காயலர் தங்குமிட உருவாக்கம்:
மருத்துவத் தேவைகளுக்காகவும், விமானப் பயணிகளை வரவேற்க - வழியனுப்புவதற்காகவும் திருவனந்தபுரம் வருகை தரும் காயலர்கள் எவ்விர சிரமமுமின்றி திருப்தியாகத் தங்கிச் செல்வதற்கு ஏற்ற வகையில் ஓர் இடத்தை வாங்கி, கட்டிடம் அமைக்க வேண்டும் என மன்றத்தின் துவக்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த வகைக்காக, மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர தனவந்தர்கள் என அனைவரிடமும் நன்கொடை வசூலிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2 – வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை இப்பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - வாய்ப்பிருந்தால் ஹஜ் பெருநாளையொட்டி பொதுக்குழு:
விடுமுறைகளை அனுசரித்து, வாய்ப்பிருந்தால், எதிர்வரும் ஹஜ் பெருநாளையொட்டியும் ஏதேனும் ஒரு தோட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 – திருவனந்தபுரம் நேரடி பேருந்து சேவை ஏற்பாட்டிற்கு நன்றி:
திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் தொடர்கோரிக்கையை ஏற்று, காயல்பட்டினம் - திருவனந்தபுரம் இடையே தினசரி நேரடி பேருந்து சேவையை இயக்கப்பட முயற்சிகள் மேற்கொண்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதற்கு ஊக்கமளித்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உத்தரவு பிறப்பித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கும், இவர்கள் அனைவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் இப்பொதுக்குழு தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்றச் செயலாளர் ஸ்கட் அபூபக்கர் நன்றி கூற, ஹாஃபிழ் அரஃபாத் இஸ்மாஈலின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பொதுக்குழுவில் உறுப்பினர்கள் கலந்துகொள்வதற்காக சிற்றுந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலர் இச்சிற்றுந்திலும், மற்றவர்கள் தமது இருசக்கர - நாற்சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர்.
கூட்டத்தையொட்டி, மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டது.
மன்ற உறுப்பினர்களின் தனி அனுசரணைத் தொகை மூலமே பொதுக்குழு ஏற்பாடுகள், விருந்து ஏற்பாடுகளுக்கான செலவினங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
சொளுக்கு S.M.I.செய்யித் முஹம்மத் ஸாஹிப் &
மவ்லவீ ஹாஃபிழ் J.A.தாவூத் மாஹின் மஹ்ழரீ,
காயல்பட்டினம். |