ஐக்கிய அரபு அமீரகத்தில் 16.11.2010 அன்று ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களின் அல்துவார் வில்லாவில் பெருநாள் வெட்டை சிறப்புற நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் தனித்தும், தமது குடும்பத்தினருடனும் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களை ஆடிட்டர் வாயில் வரை வந்து வரவேற்றார். அனைவருக்கும் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
துவக்கமாக அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக என்று மட்டுமே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நகர்நலப் பணிகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் சுவையான விருந்து பரிமாறப்பட்டது. முன்னரே ஆயத்தம் செய்த விருந்தாக அல்லாமல், அங்கேயே சுடச்சுட வடை, தோசை மற்றும் பலகாரங்கள் சுட்டுப் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இரவு 10 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுற்றன.
இதுபோன்ற பெருநாள் வெட்டை நிகழ்வை அனைத்து வருடங்களிலும் இறையருளால் சிறப்புற நடத்த வேண்டுமென நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, காயல்பட்டினத்திலுள்ள சிறுவர் - சிறுமியரைப் போல, இந்த ஒன்றுகூடல் நிகழ்வை மிகவும் உற்சாகத்துடன் கழித்த சிறாருக்கு, அதுபோன்ற சுதந்திரங்களைப் பெற்றிடவியலாத இவ்விடத்தில், இதுபோன்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் தேவை என்பது உணரப்பட்டது.
எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் இச்சமூகத்தை இறுதி வரை ஒற்றுமையுடன் வாழச் செய்வானாக என வந்தவர்கள் பிரார்த்தித்துச் சென்றனர்.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |