பூச்சிகளினால் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை வலுவாக ஏற்படுத்திடும் பொருட்டு, அவர்களை அதிகம் அணுகிடும் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு முகாம், 22.11.2010 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் எஸ்.ஏ.சுலைமான் ப்ளாக் வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் காஜா முகைதீன், சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி, எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, நோய்களைப் பரப்பும் கொசுக்கள், பூச்சிகள் வளர்தல், பரவுதல் மற்றும் அவற்றை அழிக்கும் முறைமைகள் குறித்து மண்டல பூச்சியியல் துறை அதிகாரி மந்திரம் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் மூலம் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உருவாகுதல், பெருகுதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் டாக்டர் உமா விளக்கிப் பேசினார்.
குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டி, தண்ணீர் தொட்டிகள், கிணறுகள், அரை குறையாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர், டயர், பாத்திரங்கள் உள்ளிட்ட பள்ளமானவற்றில் நாட்கணக்கில் தேங்கியிருக்கும் தண்ணீர் உள்ளிட்டவற்றின் மூலமாகத்தான் நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உருவாகி பெருகுவதாகவும், அவற்றை அழித்திடும் முறைகள் பற்றியும் இம்முகாமில் அசைபட உருப்பெருக்கி (வீடியோ ப்ரொஜெக்டர்) உதவியுடன் விளக்கமளிக்கப்பட்டது.
ரூபாய் 110 தினக்கூலி அடிப்படையில், அனைத்து வட்டாரங்களுக்கும் துப்புரவுப் பணியாளர்கள் 90 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க அவர்கள் மருந்தடித்து, கூளங்களை அப்புறப்படுத்துவர் என்றும் முகாமில் தெரிவிக்கப்பட்டது.
நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் போதாது என்று கூறிய நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்காயருக்கு பதிலளித்துப் பேசிய மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குநர் உமா, ஒரு லட்சம் மக்களுக்கு வெறும் 10 பணியாளர்கள் முன்பு நியமிக்கப்பட்டிருந்ததாகவும், தமிழக அரசு அதனை 15 பணியாளர்களாக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உரைகள் நிறைவுற்றதும், கொசு ஒழிப்பு முறை, நோய் பரப்பும் பூச்சிகள் உள்ளிட்டவை குறித்த கண்காட்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் கிதுரு ஃபாத்திமா, மும்பை முகைதீன், கிதுரு ஃபாத்திமா, ஜெய்னம்பு, சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் காஜா, வட்டார செய்தியாளர்கள், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயாமொழி - அரசு ஆரம்ப சுகாதார அலுவலக இயக்குநர் மற்றும் செவிலியர் செய்திருந்தனர்.
முகாம் நடைபெற்ற வளாகத்தைச் சுற்றி, சுகாதார விழிப்புணர்வூட்டும் அறிவிப்புகள் நிறுவப்பட்டிருந்தன.
|