கடந்த 19.11.2010 அன்று நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில், இக்ராஃ நிர்வாக நடவடிக்கைகளை துரிதமாக இன்னும் மெருகூட்ட ஐவர் குழு நியமிக்கப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 19.11.2010 அன்று மாலை 06.45 மணிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அறிமுகம்:
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட வெளிநாட்டு காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
செயலர் அறிக்கை:
பின்னர், இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் சென்ற கூட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்தும், இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம்:-
கல்வி உதவித்தொகை:
நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை கோரி 56 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பரிசீலனைக்குப் பின் 55 பேருக்கு கல்வி உதவித்தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்சமயம் 18 மாணவர்களுக்கும், 37 மாணவியருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
நடப்பு ஆண்டில்,
2008-2009 கல்வியாண்டில் கல்லூரியில் சேர்ந்த 60 மாணவ-மாணவியருக்கும்,
2009-2010 கல்வியாண்டில் கல்லூரியில் சேர்ந்த 50 மாணவ-மாணவியருக்கும்,
2010-2011 கல்வியாண்டில் கல்லூரியில் சேர்ந்த 56 மாணவ-மாணவியருக்கும்
என மொத்தம் 166 மாணவ-மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. உலக காயல் நல மன்றங்கள் சார்பிலும், நகரின் கல்வி ஆர்வலர்கள் சார்பிலும் இந்த ஆண்டில் மட்டும் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள 166 மாணவ-மாணவியருக்கு) ரூபாய் 8,30,000 (எட்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்) கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இக்ராஃ துவங்கிய காலம் முதல் கல்வி உதவித்தொகைக்கான நிதி திரட்டுவதில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், இவ்வாண்டு உலக காயல் நல மன்றங்களால் இக்ராஃ சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதால் அச்சிரமங்கள் போக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 10 மாணவர்களுக்கு வழங்கும் அளவுக்கு இப்போதே நிதி ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக முழு ஒத்துழைப்பளித்த உலக காயல் நல மன்றங்கள், இக்ராஃ துணைத்தலைவர்கள், இக்ராஃ தலைவர் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
அமீரக காயல் நல மன்றத்தின் கல்வி உதவித்தொகை:
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் பல்வேறு படிப்புகளுக்காக நகரின் 30 மாணவ-மாணவியருக்கு 4,85,107 (நான்கு லட்சத்து என்பத்தைந்தாயிரத்து நூற்று ஏழு ரூபாய்) கல்வி உதவித்தொகையாக இக்ராஃ மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் 18,744 (பதினெட்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து நான்கு ரூபாய்) நிதியொதுக்கப்பட்ட ஒரு மாணவரின் விண்ணப்பம் முறைகேடானது என்பது பரிசீலனையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது உதவித்தொகை பிடித்தம் செய்யப்பட்டது.
பிற மன்றங்களின் இதர உதவித்தொகைகள் வினியோகம்:
உலக காயல் நல மன்றங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவற்றின் கல்வி, மருத்துவம், சிறுதொழில் உதவித்தொகைகள் இக்ராஃவின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு:
அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட நல்லாசிரியருக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட “சிறகுகளை விரியுங்கள்” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு, இக்ராஃவின் சார்பில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டது.
ஜகாத் நிதி:
ஜகாத் நிதியாக ரூபாய் 48,800 (நாற்பத்தெட்டாயிரத்து எட்டு நூறு ரூபாய்) இக்ராஃவால் பெறப்பட்டுள்ளது. அதில், ஜகாத் பெறத் தகுதியான ஒரேயொரு மாணவருக்கு ரூபாய் 3,000 (மூவாயிரம் ரூபாய்) கல்வி உதவித்தொகையாக அவசர அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயலர் உரையின் உள்ளடக்கம் அமைந்திருந்தது.
பின்னர் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டவை பின்வருமாறு:-
ஒருங்கிணைந்த முறையில் இலவச பாடநூல் வினியோகம்:
நகரின் ஏழை மாணவ-மாணவியருக்காக பல்வேறு பொதுநல மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் பள்ளிப் பாடநூற்கள், பள்ளிச் சீருடைகள் இலவசமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை ஒருமுகப்படுத்தி, இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் ஒரே இடத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனைக்குப் பின் அவ்விண்ணப்பங்கள் அமைப்புகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, அவற்றுக்கான பாடநூற்கள், சீருடைகள் இலவசமாக வினியோகிக்கப்பட வேண்டும் என்ற காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
அதனடிப்படையில், வரும் கல்வியாண்டின் வினியோகத்திற்கான முன்னேற்பாடுகளைத் துரிதமாக செய்வதென முடிவு செய்யப்பட்டது.
தலைமையாசிரியர்களுடன் கலந்தாலோசனை:
ஆண்டுதோறும் நகர மாணவியரின் தேர்ச்சி உயர்ந்துகொண்டு செல்லும் அதே சமயம், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துகொண்டே செல்வதைக் கருத்தில்கொண்டு, அக்குறையைப் போக்கும் வண்ணம், நகரின் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தைக் கூட்டி, கலந்தாலோசிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்ப்பு மாதம்:
இக்ராஃவின் நிர்வாகத்தை செவ்வனே நடத்திடும் பொருட்டு உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரும் டிசம்பர் மாத இறுதியில் கூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் தலா பத்து பேரை இக்ராஃவின் உறுப்பினர்களாக சமர்ப்பிக்க வேண்டும் என கூட்ட்த் தலைவர் கேட்டுக்கொள்ள, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
அத்துடன், வரும் டிசம்பர் மாதத்தை “உறுப்பினர் சேர்ப்பு மாத”மாக அறிவிக்கலாம் என்ற கூட்டத் தலைவரின் கருத்து ஏற்கப்பட்டு, அதனடிப்படையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
நிர்வாகச் செலவுக்கு நிதி பற்றாக்குறை:
இக்ராஃவின் நிர்வாகச் செலவு ஆண்டுக்கு ரூபாய் 56,000 (ஐம்பத்தாறாயிரம் ரூபாய்) பற்றாக்குறையில் உள்ளதாக செயலர் தெரிவித்தார். இக்குறையைப் போக்குவதற்காக கலந்தாலோசிக்கப்பட்டு இறுதியில்,
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் மாதம் ரூபாய் 1,500 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 18,000 தொகையும்,
ரியாத் அபூபக்கர் (கூஸ்) ஆண்டுக்கு ரூபாய் 5,000 தொகையும்,
துபை முத்து ஃபரீத் ஆண்டுக்கு ரூபாய் 6,000 தொகையும்
இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்காக நன்கொடையளிப்பதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே இக்ராஃ அலுவலக வாடகை வகைக்காக மாதந்தோறும் ரூபாய் 500 வீதம், ஆண்டுக்கு ரூபாய் 6,000 வழங்கி வரும் இக்ராஃ செயற்குழு உறுப்பினர் கலீல் (ஜெஸ்மின் பாரடைஸ்) மற்றும் புதிதாக நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ள அனைவருக்கும் கூட்டத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
நிர்வாகத்தை மெருகூட்டல்:
கூட்டத்தில் கருத்து தெரிவித்த ரியாத் அபூபக்கர், இக்ராஃ அலுவலகப் பணியாளர்களின் மாத ஊதியம் குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், செயலாளருக்கு அலுவலகம் வரவியலாத நேரங்களில் நிர்வாகச் செயல்பாடுகள் பாதிப்படையாதிருக்கும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், இவற்றைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்காகவும், இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கான பற்றாக்குறையைப் போக்குவது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காகவும் ஐவர் குழு ஒன்றை நியமிக்கலாம் என்றார்.
அக்கருத்து கூட்டத்தில் ஏற்கப்பட்டு அதனடிப்படையில்,
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்,
ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி எம்.எம்.உவைஸ் (தாய்லாந்து),
ஹாஜி யூனுஸ் (அமீரகம்)
ஆகியோரடங்கிய ஐவர் குழு நியமிக்கப்படுவதாகவும், 21.11.2010 அன்று காலை 11.00 மணிக்கு இக்குழு கூடி, மேற்படி அம்சங்கள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்ட துளிகள்...
இலச்சினை உருவாக்கம்...
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கென இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கான இலச்சினையை உருவாக்கியவரான ஹுஸைன் நூருத்தீனிடம் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நகர் நலனுக்காக நேரம் ஒதுக்கீடு...
பஹ்ரைன் காயல் நல மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றி, தற்சமயம் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுலைமான், நகர்நலப் பணிகளுக்காக தன்னாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் ஊரில் இருப்பவன் என்ற அடிப்படையில் தர ஆயத்தமாக உள்ளதாகவும், அதன் முதல் படியாக, வாரத்தில் 3 நாட்கள் இக்ராஃ அலுவலகத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் இருந்து, நகர மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதலைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பைப் பாராட்டிப் பேசிய கூட்டத் தலைவர், ஊரிலிருக்கும் இதர மக்கள் இவரது இந்த அறிவிப்பை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு அதிகளவில் கல்வி உதவித்தொகை ஏன்?
கல்வி உதவித்தொகை பெறும் மாணவியரை விட மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது குறித்து எஸ்.ஐ.புகாரீ (இலங்கை) இடையில் கேள்வி எழுப்பினார்.
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்காகவும், தொழிற்கல்விக்காகவும் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், மாணவியர் பெரும்பாலும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்வதால் அவர்களது விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், ஆண்கள் பெரும்பாலும் பொறியியல் படிப்பில் சேர்வதால் அவர்களின் விண்ணப்பங்கள் மாணவியரை விட குறைவாக உள்ளதாகவும் செயலர் விளக்கமளித்தார்.
அனுசரணையாளர்கள் பட்டியல்...
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் நகரின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள தனி நபர்கள் அடங்கிய இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான அனைத்து அனுசரணையாளர்கள் பட்டியலை செயலர் இக்கூட்டத்தில் வாசித்தார்.
ஜகாத் நிதி...
பொதுமக்கள் தாமாக முன்வந்து தரும் ஜகாத் தொகையை தனிக் கணக்கில் பாதுகாத்து வைத்துள்ளதாகவும், கூட்டம் அனுமதித்தால் ஜகாத் பெற தகுதியானவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தின் கீழ் அத்தொகையை வழங்கலாம் என்றும் செயலர் தெரிவிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
அலுவலக பயன்பாட்டுப் பொருட்கள்...
இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் அடிக்கடி நடத்தப்படும் நேர்காணல், முக்கிய ஆலோசனைக் கூட்டங்களுக்காக தற்சமயம் பிற இடங்களிலிருந்து நாற்காலிகள் பெறப்படுவதாகவும், அலுவலகத்திற்கென்று 50 நாற்காலிகள் தேவைப்படுவதாகவும் செயலர் தெரிவித்தார்.
அதனைக் கருத்தில் கொண்ட கூட்டத் தலைவர், கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் இதற்காக தங்களது அனுசரணையை அறிவிக்கலாம் என்றும், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 05 நாற்காலிகளுக்கு அனுசரணை வழங்குவதாகவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து,
ரியாத் அபூபக்கர் (கூஸ்) 05 நாற்காலிகளுக்கும்,
ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் 05 நாற்காலிகளுக்கும்,
இலங்கை காயல் நல மன்றம் 05 நாற்காலிகளுக்கும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் 05 நாற்காலிகளுக்கும்,
பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா) 05 நாற்காலிகளுக்கும்,
ஜித்தா காயல் நற்பணி மன்றம் 05 நாற்காலிகளுக்கும்,
கத்தர் காயல் நல மன்றம் 05 நாற்காலிகளுக்கும்,
அமீரக காயல் நல மன்றம் 05 நாற்காலிகளுக்கும்,
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) 05 நாற்காலிகளுக்கும்
அனுசரணை வழங்குவதாக அறிவித்தனர். உலக காயல் நல மன்றங்களின் சார்பில் அனுசரணை அறிவித்தவர்கள், தமது மன்ற நிர்வாகத்தின் முறைப்படியான அனுமதியைப் பெற்ற பின் அனுசரணை அறிவிப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்தனர்.
கல்வி உதவித்தொகைக்கான இதர ஆலோசனைகள்...
அனைத்து மாணவ-மாணவியருக்கும் நாமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றில்லாமல், பல்வேறு துறைகளின் கீழ் மத்திய - மாநில அரசுகள் மாணவ-மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையைப் பெற்றுக்கொடுக்கும் பணியை இக்ராஃ செய்ய வேண்டும் என காவாலங்கா சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹாஜி எஸ்.ஐ.புகாரீ தெரிவித்தார். அவ்வாறே செய்யப்பட்டு வருவதாக செயலர் பதிலளித்தார்.
ஒரு மாணவருக்கு ரூபாய் 5,000 என்ற தொகை நிர்ணயத்தை மாற்றி, கல்விக்காக ஏற்படும் முழுச் செலவையும் இக்ராஃ பொறப்பேற்கலாம் என செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் தெரிவித்தார்.
தற்போது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள் உதவித்தொகை நிர்ணயத்தை தொய்வின்றி தொடர்ந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின், போதுமான அளவுக்கு நிதி திரட்டி, தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவியருக்கும் முழு கல்விச் செலவையும் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூட்டத் தலைவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் நன்கொடை...
இக்ராஃவின் கல்விச் சேவைப் பணிகளுக்காக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தருவதாக வாக்களித்திருந்த நன்கொடைத் தொகையை துரிதமாகப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஊரிலிருப்பவரை பொருளாளராக நியமித்தல்...
தற்சமயம் இக்ராஃவின் பொருளாளராக சேவையாற்றி வரும் ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர், தாம் சென்னையிலிருந்து கொண்டிருப்பதாகவும், ஊரில் நிலையாக இருக்கும் தகுதி வாய்ந்த ஒருவரை இக்ராஃவின் பொருளாளராக நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதுகுறித்து, வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் எனவும், அதுவரை அவரே பொருளாளராகத் தொடரவேண்டும் எனவும் கூட்டம் அவரை ஒருமனதாகக் கேட்டுக்கொள்ள, அவர் அதனை ஒப்புக்கொண்டார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - கல்வி உதவித்தொகைக்காக ஜகாத் நிதியைப் பயன்படுத்தல்:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஜகாத் பெறுவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களை இனங்கண்டு, இக்ராஃவின் ஜகாத் நிதியிலிருந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கலாம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 02 - கல்வி ஒளிபரப்பு:
10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவியரை ஆயத்தம் செய்திடும் பொருட்டு, உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டு வரும் கல்வி ஒளிபரப்பை இவ்வாண்டும் தொடர்ந்து நடத்திடவும், 2011-2012 கல்வியாண்டில், நேரடி ஒளிபரப்பாக இந்நிகழ்ச்சியை வழங்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்ராஃ பொருளாளர் ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர் நன்றி கூற, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்களும், தாயகத்திலிருக்கும் உலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
இச்செய்தியில், சில சொற்பிழைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அவை சிவப்பு நிறத்தில் தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. |