வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவி புரிவதற்கு என்று இந்திய வெளியுறவு துறை 2009 ஜனவரி முதல் இந்திய சமூக நல நிதி (Indian
Community Welfare Fund - ICWF) என்ற பெயரில் உதவி திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்மூலம் வெளிநாடுகளில் வேலைக்காக சென்று, அங்கு
ஏற்பட்ட பிரச்சனைகளால் பொருள் உதவி தேவைப்படும் இந்தியர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, உணவுக்கு, தாய்நாட்டுக்கு திரும்புவதற்கு
பயண உதவி போன்ற வகைகளுக்காக உதவுவதற்காக அந்த நிதி துவக்கப்பட்டது.
ஆரம்பமாக Emigration Clearance Required (ECR) தேவைப்படும் 17 நாடுகளில் மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 48
நாடுகளுக்கு விரிவாக்கபட்ட இத்திட்டம் இப்போது அனைத்து நாடுகளிலும் செயல்படுத்தப்படும் என நேற்று வெளிநாடுகளில் வாழும்
இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் (GCC) சுமார் 53 லட்ச இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஏறத்தாழ 65 - 70 சதவீதப்பேர் தொழிலாளர்கள் ஆவார்.
அவர்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தகவல் தரும் பொருட்டு Overseas Workers Resource Centre (OWRC) என்ற பெயரில் சிறப்பு மையம் செயல்பட்டுவருகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும்.
அம்மையத்திற்கான இந்தியாவிலிருந்து டோல் ப்ரீ எண் - 1800-11-3090, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து டோல் ப்ரீ எண் - 8000911913, புது டில்லியில் நேரடி எண் - +91-11-40503090. அதன் ஈமெயில் முகவரி - owrc.helpline@kankei.com |