இந்த வருடம் இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE) மூலம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் திருப்தியில்லை என ஹஜ் செய்ய சவுதி வந்த இந்திய
ஹஜ் நல்லெண்ண குழு (INDIA HAJ GOODWILL MISSION) தலைவர் நீதிபதி நிசார் அஹ்மத் கக்ரூ தெரிவித்துள்ளார். ஆந்திரா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான இவர்
- ஜித்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இதனை தெரிவித்தார்.
யாத்திரிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடங்கள் பல பயன்படுத்த தகுதியற்றவையாக இருந்தது என்றும், விதிமுறைகளை மீறி ஒரே அறையில் கூடுதலாக
யாத்ரிகர்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிபதிக்கு முன்னதாக பேசிய சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் தல்மிஸ் அஹ்மத் மற்றும் ஜித்தா தூதரக தலைமை அதிகாரி சயீத் அஹ்மத்
பாபா ஆகியோர் இவ்வருட ஏற்பாடுகள் சீராக இருந்ததாக கூறினர்.
மேலும் புது பிரச்சனையாக யாத்திரிகர்களை நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் விமானங்கள் பல ரத்து ஆனதால் பல பயணியர் ஜித்தா விமான
நிலையத்தில் பரிதவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்ற யாத்ரிகர்கள் பாதிக்கப்பட்டதை முதல்வர்
கேஹ்லோட் ஏற்கானவே மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நேற்று இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளிநாடு வாழ்
இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி - பாதிக்கப்பட்ட அனைத்து யாத்ரிகர்களையும் விரைவில் திரும்ப கொண்டு வர ஏர் இந்திய நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹஜ் யாத்ரிகர்கள் நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். நவம்பர் 30 அதிகாலை நிலவரப்படி ஜித்தா மற்றும் மதினா
விமானநிலையங்களில் இருந்து 126 விமானங்களில் 35,582 யாத்ரிகர்கள் நாடு திரும்பி உள்ளனர்.தற்போது மக்காவில் 73,372 யாத்ரிகர்களும்,
மதினாவில் 16,956 யாத்ரிகர்களும் இருப்பதாகவும் தூதரக செய்தி தெரிவிக்கிறது.
யாத்திரை மேற்கொண்டவர்களில் 226 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், அதில் தனியார் நிறுவங்கள் மூலம் இந்தியாவிலிருந்து சென்ற 60 பேரும் அடங்கும்
என மேலும் அச்செய்தி தெரிவிக்கிறது.
தகவல்:
Arab News மற்றும் இந்திய தூதரகம் |