மன்ற உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பைத் தந்தால், காயல்பட்டினத்தைத் தூக்கி நிறுத்தலாம் என அமீரக காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் தலைவர் தெரிவித்தார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் உறுப்பினர் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, துபை அல்ஸஃபா பூங்காவில் நடைபெற்றது. மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ முன்னிலை வகித்தார். ஐக்கிய அரபு அமீரகம் துபை லேண்ட்மார்க் குழும நிறுவனங்களின் அதிபர் ஸாதிக், துபை பைரஹா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் கீழக்கரையைச் சார்ந்த ஹாஜி நஜ்முத்தீன், இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன் பொது மேலாளர் கீழக்கரை ஹாஜி செய்யித் ஹுஸைன், திருச்சி நகரிலுள்ள எல்.கே.எஸ். ஃபர்னிச்சர் நிறுவனத்தின் அதிபர் ஹாஜி எல்.கே.கே.செய்யித் அஹ்மத், சென்னை இ.டி.ஏ. மெல்கோ. நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
தலைவர் உரை:
பின்னர் கூட்டத் தலைவரும், அமீரக காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ உரையாற்றினார். அவர் தனதுரையில்,
நமதூரில் பல தெருக்கள், பல வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கின்றோம். எனினும், அவற்றைப் பாராமல் இங்கு அனைவரும் ஒரு சேர வந்தமர்ந்திருப்பது உண்மையில் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் நமது மன்றம் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை நிறைவேற்றி, தேவையுடையோரின் தேவைகளைத் தகுந்த நேரத்தில் கண்டறிந்து பூர்த்தி செய்துள்ளது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆவலிலும் நம் மன்றம் உள்ளது. எனினும் இவையனைத்தும் உறுப்பினர்களாகிய உங்கள் யாவரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நடைமுறை சாத்தியமாகும்.
மன்றத்தின் உறுப்பினர் சந்தா மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது. இதுவரை மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள அனைத்து நற்பணிகளும் பல்வேறு வாய்ப்புகளின் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக காயல் நல மன்றங்களில் நம் மன்றத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் யாருக்கும் எந்த வேலையும் வைக்காமல், தாமாக முன்வந்து, தமது கடமையெனக் கருதி மாதச் சந்தா தொகையை சமர்ப்பித்தால் இன்ஷாஅல்லாஹ் நமதூரைத் தூக்கிப் பிடிக்க அது ஒன்றே போதும்...
இன்று நம் நகரில் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இது விஷயத்தில் துவக்கமாக அக்கறை எடுத்துக்கொண்டு, செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்திற்கு உறுதுணையாக இருந்து, அவர்கள் வகுக்கும் செயல்திட்டங்களில் நம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும்... என்றார்.
ஆண்டறிக்கை:
தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, மன்ற கல்விக்குழு செயலாளர் மூஸா நெய்னா, மன்றத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். கடந்த ஓராண்டில் மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள அறப்பணிகள், அவற்றுக்கான செலவுத்தொகை விபரங்கள் உள்ளிட்டவற்றை புள்ளிவிபரத்துடன் அவர் தெளிவுற எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் உரை:
மன்றத்தின் சேவை மகத்தானது! -எல்.கே.கே.செய்யித் அஹ்மத் (அதிபர், எல்.கே.எஸ். ஃபர்னிச்சர், திருச்சி)
சிறப்பு விருந்தினர் வரிசையில், திருச்சி எல்.கே.எஸ். ஃபர்னிச்சர் அதிபர் எல்.கே.கே.செய்யித் அஹ்மத் துவக்கமாக உரையாற்றினார். அவர் தனதுரையில்,
1971ஆம் ஆண்டு நான் அமீரகத்தில் அடியெடுத்து வைத்தேன். அன்றெல்லாம் மிகவும் சொற்பமான காயலர்களே இங்கு பணியாற்றினர். இன்றோ நம் மக்கள் மிகப்பெரிய அளவில் இங்கு சொந்தமாக வியாபாரம் செய்கின்றனர்... பணியாற்றுகின்றனர்... வந்து செல்கின்றனர்... இதனைப் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.
இன்று நண்பகலில் நடைபெற்ற ஜும்ஆ குத்பா உரையில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவதன் அவசியம் குறித்தும், ஒற்றுமைக்கு இழுக்குண்டாக்குவோரின் கதி குறித்தும் இறைமறை குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் ஏராளமான செய்திகளை கத்தீப் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான செய்தியாகவே அதை நான் பார்க்கிறேன்...
ஆம்! கருத்து வேறுபாடுகள் நமக்கிடையில் மார்க்க ரீதியாக பல இருந்தும், இவ்விடத்தில் அவற்றைப் பாராமல் ஒற்றுமையாக – குடும்பத்தினருடன் ஒன்றுகூடியிருப்பது உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மன்றத்தின் உழைப்பு, சேவை மகத்தானது! அவை தொடர அல்லாஹ் அருள் புரிவானாக... என்றார்.
தொடர்ச்சியான பின்தொடரல்தான் இந்த அமைப்பை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறது! –கீழக்கரை ஹாஜி சாதிக் (அதிபர், லேண்ட்மார்க் குழும நிறுவனங்கள், துபை, ஐக்கிய அரபு அமீரகம்)
சிறப்பு விருந்தினர்களில் அடுத்து உரையாற்றிய துபை லேண்ட்மார்க் ஹோட்டல் அதிபர் கீழக்கரை ஸாதிக் ஹாஜி தனதுரையில்,
நான் இந்த அமீரக காயல் நல மன்றத்தின் இதுபோன்ற ஓரிரு கூட்டங்களில் இதற்கு முன்பும் கலந்துகொண்டிருக்கிறேன்... அன்றிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இன்றைக்கு நிறைய மாற்றங்களை என்னால் காண முடிகிறது.
நிறைய உறுப்பினர்கள்... நிறைய சமூக - சமுதாயப் பணிகள்... இவையனைத்தும் மன்றத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் அயராத உழைப்பாலேயே சாத்தியமாயிற்று!
இன்று என்னை இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைத்திருந்தார் மன்றத் தலைவர் புகாரீ ஹாஜியார். ஆனால், அழைத்தது முதல் அடிக்கொரு ஃபோன் கால் செய்து என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார். துவக்கமாக அழைப்பதற்கு ஒரு ஃபோன்... அதை நினைவூட்ட தினமும் சில தொலைபேசி அழைப்புகள்... இன்று காலையில் ஓர் அழைப்பு... நான் கிளம்பிவிட்டேனா என்பதை அறிய ஓர் அழைப்பு... நான் இங்கு வந்துவிட்டேனா என்று அறிந்திட ஓர் அழைப்பு... பூங்காவிற்குள் நான் நுழைந்துவிட்டதை உறுதி செய்ய ஓர் அழைப்பு....
ஒரு வேலையை சிரமேற்கொண்டால், இப்படியான தொடர்ச்சியான பின்தொடரல் (ஃபாலோ-அப்) இருந்தால் மட்டுமே அது முழுமையடையும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் உங்கள் மன்றத் தலைவர் புகாரீ ஹாஜியார்...
எங்கள் நிறுவனங்கள் சார்பாக, சிரமப்படும் சமுதாய மக்களுக்காக அமைப்பை நிறுவி, நிதி திரட்டப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கு எவ்விதம் வழங்குவது என்று முடிவு செய்வதில் நாங்கள் சற்று சிரமப்படத்தான் செய்கிறோம்.
ஆனால், அவற்றையெல்லாம் எவ்வாறு வினியோகிப்பது என்பன போன்ற பாடங்கள் உங்கள் மன்றத்தின் செயல்திட்டங்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... என்றார்.
என்னை மதித்து அழைத்ததே எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது... –ஹாஜி செய்யித் ஹுஸைன் (பொது மேலாளர், இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன்)
தொடர்ந்து உரையாற்றிய இ.டி.ஏ. ஷிப்பிங் டிவிஷன் பொது மேலாளர் கீழக்கரை ஹாஜி செய்யித் ஹுஸைன் தனதுரையில்,
நான் வயதில் மிகவும் சிறியவன்... இத்தனை பெரியவர்கள், அனுபவசாலிகள், பொதுச்சேவைகளில் ஊறித்திளைத்தவர்கள் ஒன்றுகூடி அலங்கரித்துக் கொண்டிருக்கும் இச்சபையில் என்னையும் மதித்து அழைத்து, மேடையில் அமரச் செய்திருப்பதை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்... என்றார்.
காயல்பட்டினம் எங்கள் ஊர் என்று சொல்வதில் பெருமையடைகிறோம்... –ஹாஜி கீழக்கரை நஜ்முத்தீன் (அதிபர், பைரஹா டைமண்ட்ஸ் அன்ட், துபை)
சிறப்பு விருந்தினர் வரிசையில் தொடர்ந்து உரையாற்றிய துபை பைரஹா டைமண்ட்ஸ நிறுவனத்தின் அதிபர் கீழக்கரை ஹாஜி நஜ்முத்தீன் தனதுரையில்,
எந்த நல்ல காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதைச் செய்து முடிப்பது கீழக்கரையா, காயல்பட்டினமா என்ற நீயா, நானா போட்டி நமது இரண்டு ஊராருக்கிடையிலும் எப்போதும் உண்டு. என்றாலும், பொதுச் சேவைகளில் இவ்வளவு திட்டமிட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் காயல்பட்டினத்தைப் பார்க்க எனக்கு சற்று பொறாமையாகத்தான் உள்ளது!
சன் டி.வி. “நிஜம்” நிகழ்ச்சியில் காயல்பட்டினம் குறித்த தகவல் தொகுப்பு சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டது. நானும் அதை ஆர்வத்துடன் கவனித்தேன். காயல்பட்டினம் மக்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை குறித்து அதில் கருத்து தெரிவிக்கப்பட்டபோது, என்னுடன் இருந்த என் வீட்டார், “எங்க ஊர் காயல்பட்டினத்தைப் பற்றித்தான் சொல்றாங்க...” என்றார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த நிகழ்வாகும்.
நீங்கள் யாவரும் ஒற்றுமையுடன் ஊருக்கு ஒருங்கிணைந்த பல நற்பணிகளை ஆற்றிட அல்லாஹ் அருள் புரிவானாக... என்றார்.
உலக காயல் நல மன்றங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அமீரக மன்றம்! –எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் (இயக்குனர், இ.டி.ஏ. மெல்கோ நிறுவனம், சென்னை)
சிறப்பு விருந்தினர் வரிசையில் இறுதியாக உரையாற்றிய சென்னை இ.டி.ஏ.மெல்கோ நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் தனதுரையில்,
நான் இந்த அமீரக காயல் நல மன்றத்தின் துவக்க கால உறுப்பினர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மன்றம் துவக்கப்பட்டபோது நான் அதில் உறுப்பினரானேன்.
அன்றிருந்த அமைப்பிலிருந்து, இன்றுள்ள அமைப்பு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது... நிறைய சேவைத் திட்டங்களைச் செய்துள்ளது இம்மன்றம்...
நமதூர் கே.எம்.டி. மருத்துவமனையை நாம் மெருகூற்ற வேண்டும். அதற்கு இன்னும் பல உதவிப்பணிகளை இம்மன்றம் செய்திட வேண்டும். நமதூர் இளைஞர்கள் தொடர்ச்சியான ஊக்கமளிக்க வேண்டும்.
முன்பு போலல்லாமல் இன்று நமதூர் மாணவர்கள் நிறைய படிப்புத் துறைகளில் படித்து பட்டம் பெறுகிறார்கள்... இன்றைய தேவை என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ற பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிப்பதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்... என்றார்.
காயல்பட்டினத்தில் அனைத்து மஹல்லாக்களின் நேரடி கட்டுப்பாட்டிலான நிர்வாகக் கூட்டமைப்பு தேவை! –எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர், தாருத்திப்யான் நெட்வர்க்)
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் தற்போதைய தேவை குறித்து உரையாற்றுவதற்காக சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ். அவர் தனதுரையில்,
கீழக்கரையினருக்கும் நன்மையில் பங்குண்டு...
இங்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றிய பெருமக்கள் காயல்பட்டினத்தைப் பார்க்க பொறாமையாக இருப்பதாக ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள். உண்மையில் அவர்களின் மகத்தான தொழில் வழிகாட்டுதலைப் பார்த்து காயல்பட்டினத்தாராகிய நாம்தான் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
ஆம், இன்று கீழக்கரையைச் சார்ந்த நம் பெரியவர்கள் தொழில் துறையில் இறையருளால் இந்தளவுக்கு காலூன்றியிருக்கவில்லையெனில், தமிழ் பேசும் முஸ்லிம்கள் இந்தளவுக்கு பெருவாரியான அளவில் இந்த அமீரகத்தில் இருந்திருப்பார்களா...?
பெரும்பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமிழ் பேசும் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, தகுதியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கும் கூட நல்ல வேலைவாய்ப்புகளை அமைத்துக் கொடுத்து, இன்று அவர்கள் தம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் காரணம் கீழக்கரையைச் சார்ந்த இந்த பெரியவர்கள்தான்!
எனவே, இந்த மன்றத்தின் எந்த ஒரு நற்பணியாக இருந்தாலும், அவையனைத்தின் நன்மைகளிலும் கீழக்கரை தொழில் வழிகாட்டிகளுக்கு நிச்சயம் அல்லாஹ் ஒரு சம பங்கை வைத்திருக்கிறான் என்றே நான் கருதுவேன்...
மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு...
காயல்பட்டினத்தில் இன்று நம்மை வேதனையிலாழத்தக் கூடிய பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன... ஒழுக்க சீர்கேடுகள், இளைஞர்களின் கட்டுப்பாடற்ற தன்மை, கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சிக் குறைவு, சிதைந்து வரும் பெண்கள் கட்டுப்பாடு, மறைந்து வரும் மார்க்க விழுமியங்கள்... நகர நிர்வாகங்களின் சீர்கேடு...
இவையனைத்தையும் ஒன்றிணைந்து சரிசெய்ய வேண்டிய கடமை நம் யாவருக்கும உள்ளது. அதன் முதற்கட்டமாக, நம் ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நேரடி நிர்வாகிகளையும் அங்கத்தினராகக் கொண்ட கூட்டமைப்பை அமைத்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அவர்களில் ஒருவரை அக்கூட்டமைப்பின் தலைவராக்கி, அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, நகர சீர்கேடுகளைக் களைந்து, கட்டுப்பாட்டுடன் கூடிய சமூக ஒற்றுமையை, பிற சமுதாயத்தினருடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவர் மீதும் கடமை.
அதனைக் கருத்தில் கொண்டு, நகர சங்கங்களின் மூலமாக இதுகுறித்த செயல்திட்ட முன்வடிவு ஒன்று உருவாக்கப்பட்டு, நமது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இறையருளால் அது சாத்தியமானால், நம் நகரில் கட்டுப்பாட்டுடன் கூடிய நகர நிர்வாகம், சமய நல்லிணக்கம், ஒழுக்க மேம்பாடு, சமூகப் புரட்சி ஆகியவற்றை நம்மால் நிச்சயம் செய்து காட்ட முடியும்.
புற்றுநோய்க்கெதிரான செயல்திட்டம்...
நம் நகரில் இன்று புற்றுநோயாளிகள் மிக அதிகளவில் பெருகி வருகின்றனர். எங்கோ, யாருக்கோ ஏற்பட்டது என்ற நிலை மாறி, இன்று நம்மவர்கள் ஒவ்வொருவருமே நம்மைச் சார்ந்தவர்களை புற்றுநோயாளிகளாகக் காணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் இன்று மரணித்தும் விட்டார்கள்...
இந்நோய் பரவலுக்கான சரியான காரணத்தை முறைப்படி கண்டறிய வேண்டிய அவசியம் நமக்குள்ளது. கண்ணை மூடிக்கொண்டு, அந்த தொழிற்சாலைதான் காரணம்... இந்த மொபைல் ஃபோன்தான் காரணம் என்று சொல்லி முடித்துவிடாமல், எது காரணம் என்பதை எவ்வாறு கண்டறிய வேண்டுமோ அதற்கான வழி வகைகளைச் செய்ய வேண்டும்.
தலைவர் அவர்கள் சொன்னது போல, இது விஷயத்தில் துவக்கமாக அக்கறை எடுத்து செயல்வடிவம் தந்த கத்தர் காயல் நல மன்றத்தின் தலைமையில் இதர மன்றங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றினால் நிச்சயம் நம்மால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இருக்கும் உயிர்களையேனும் காத்திட இயலும்.
எனினும், பரவலாக இன்று காரணமாகச் சொல்லப்படுவது நமதூருக்கு அருகிலுள்ள தொழிற்சாலையினால் என்பதுதான்! சரியான செயல்திட்டத்துடன் அதை ஆய்ந்தறிந்து நாம் சொல்ல வேண்டும். உண்மையில் அத்தொழிற்சாலை காரணமல்ல என்று ஆய்வின் இறுதியில் உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்கவும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அடுத்து காரணமாகச் சொல்லப்படுவது கைபேசி பரவல். இன்று நம் வீடுகளிலுள்ள ஒவ்வொருவரிடமும் கைபேசி உள்ளது. தூங்கியெழுவதற்கு அலாரமாக்க கூட அதுதான் நம் தலைக்கருகில் இருக்கிறது. இதன் வீரியம் நம் உடலில் எந்தளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் கண்டறிந்து, ஒருவேளை அதைத் தவிர்த்துதான் ஆக வேண்டுமென்றால் நம் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
அடுத்து, நம் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களை நாம் செய்தாக வேண்டியுள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. மற்றவை விஷமாக வெளியேற்றப்படுகிறது. அவை பெரும்பாலும் வியர்வை, சிறுநீராக வெளியேறுகிறது, வெளியேற வேண்டும்.
ஆனால், இன்று நம் வீட்டிலுள்ள ஆண்கள் பெண்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் நிறைய குறையுள்ளது. அந்தச் சாப்பாட்டின் சத்து போக எஞ்சிய கெடுதிகள் வியர்வையாக வெளியேறுவது முற்றிலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு!
ஆம், அன்றிருந்த ஆட்டு உரல், அம்மி, கையால் துணி துவைத்தல் உள்ளிட்ட அனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பொருட்களையெல்லாம் ஆதம் நபி காலத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களைப் பார்ப்பது போன்ற அதிசயப் பொருளாகத்தான் நாம் காண்பிக்க வேண்டிய நிலை வரும்.
அன்று நம் மக்கள் செய்யும் வேலைகளே அவர்களின் நோய் தீர்க்கும் காரணியாக இருந்தது. இன்று அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டதால், வேலை செய்யாமலேயே - மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, உடற்பயிற்சி என்ற பெயரில் கை காலை ஆட்டிக் கொண்டு இருக்க வேண்டிய நிலையாகிவிட்டது.
எனவே, நம் உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்திலும் இயன்றளவுக்கு தகுந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
அமீரக காயல் நல மன்ற சிறப்பு மலர்...
உங்கள் அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் சிறப்பு மலரொன்று வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் நம் நகர் குறித்த சரித்திரங்கள், மன்றம் துவக்கப்பட்ட வரலாறு, மன்றத்தின் சேவைகள், புகைப்படத் தொகுப்புகள், உறுப்பினர்களின் படங்களுடன் கூடிய விபரப்பட்டியல், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், துணுக்குகள் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்களின் படைப்புகள் என அனைத்தையும் இடம்பெறச் செய்திட மன்றத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த மலரை தயாரித்துத் தரும் பொறுப்பு இச்சிறியவனிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான படைப்புகளை தமது புகைப்படங்களுடன், kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு உறுப்பினர்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதே ஒற்றுமை ஊரிலும்...
இன்று இக்கூட்டத்தில் உங்கள் யாவரையும் நகர்நலன் என்ற ஒரே எண்ணங்கொண்ட காயலர்களாக ஓரிடத்திலேயே பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தருளியுள்ளான். பல கொள்கை கோட்பாடுகள், பல ஜமாஅத்தினர் போன்ற வேறுபாடுகளுக்கிடையிலும் இங்கு யாவரும் ஒன்றிணைந்து அமர்ந்திருக்கும் இக்காட்சி, இதே திறந்த மனதுடன் தாயகத்திலும் தொடர வேண்டும் என்ற எனது நெடுநாள் ஆசையை வல்ல அல்லாஹ் நிறைவேற்றித் தருவானாக...
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்ட்த்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு, மன்றத் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, துணைத்தலைவர் ஹாஜி துணி உமர் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளருக்கு ஹாஜி மக்பூலும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
பின்னர், மதிய உணவாக காலித் பிரியாணி, சிக்கன் 65 அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தேனீர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டோர் தேவைப்படும்போதெல்லாம் எடுத்துக்கொள்ளும் வகையில் தேனீர், சமோசா பொதுவிடத்தில் வைக்கப்பட்டிருந்த்து.
குழந்தைகள் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வயதுக்கேற்ப விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம நிறைவுற்றது.
கூட்டத் துளிகள்...
பகல் நேரம் குறுகியதாக இருந்ததால், உறுப்பினர் அறிமுகம் உள்ளிட்ட வழமையான கூட்ட நிரலில் பல நடைபெறாமற்போனது...
கடந்த கூட்டங்களை விட இக்கூட்டத்தில் பெண்களின் வருகை அதிகமாக இருந்தது...
பல்வேறு அவசரப் பணிகள் காரணமாக, மதிய உணவுக்குப் பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலோ கலைந்து சென்று விடுவர். ஆனால் இக்கூட்ட்த்தில், உறுப்பினர்கள் ஒருவர் கூட அசையாமல் கடைசி வரை இருந்தது நகர்நலனில் அவர்களின் அக்கறையைப் பறைசாற்றுவதாய் அமைந்திருந்த்து...
அமீரக காயல் நல மன்றம் உள்ளிட்ட உலக காயலர்களின் செய்திகளையும், உள்ளூர் செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி உடனுக்குடன் உறுதிபடுத்தி வெளியிடும் காயல்பட்டினம்.காம் வலைதளத்திற்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, மன்ற உறுப்பினர்களின் விபரப்பட்டியல் (profile), சந்தா நிலுவை, கூட்ட அறிவிப்புகள் உள்ளிட்ட அடிக்கடி செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக காயல்பட்டினம்.காம் வலைளத்தில் தனியொரு பக்கத்தை உருவாக்கித் தந்து, அதிலிருந்து உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வழிவகை செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்திற்கிடையில் அஸ்ர் தொழுகையையும், கூட்ட நிறைவில் மஃரிப் தொழுகையையும், காயலர்கள் பூங்கா வளாகத்திலேயே கூட்டாகத் தொழுதனர்.
மன்ற செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு வருவதற்கும், கூட்டம் முடிந்து செல்வதற்கும் அபூதபியிலிருந்தும், துபையிலிருந்தும் காயலர்களுக்காக இலவச வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
சாளை ஷேக் ஸலீம்
(துணைத்தலைவர்) |