தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு ஆயிரத்து 259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. கடந்த தேர்தலை விட 34 வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வீடு, வீடாகச் சென்று சோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் புதிய அரசு அமைய வேண்டும். அதற்கு ஏற்ப தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 550 வாக்காளர்கள் உள்ளனர்.
அதன் பிறகு 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 278 பேர் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு விண்ணப்பம் செய்தனர்.தற்போது இவர்கள் குறித்து வீடு, வீடாக சென்று விசாரணை செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படுகிறது. அந்த பட்டியலில் இடம் பெறுவோர் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டு போட முடியும்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளராக சேர்ந்துள்ளவர்கள் விசாரணை மற்றும் மேல்சபை தேர்தல் வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் வீடியோ கான்பரன்சிங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் மகேஷ்வரன், டி.ஆர்.ஓ துரை. ரவிச்சந்திரன், பி.ஏ.ஜி சிவன், நிக்நெட் அதிகாரி குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சாமுவேல், சிரஸ்தார் பரமசிவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்சபை தேர்தல் புதிய வாக்காளர் விபரம், சிறப்பு முகாம் நடத்துதல் உள்ளிட்ட விபரம் குறித்து தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.
மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் வாக்காளர்களாக வரும் 7ம் தேதிக்குள் சேர்ந்து கொள்ளலாம். இதற்காக வரும் 5ம் தேதி சிறப்பு முகாம் நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வாக்காளர் சேர்ப்பு சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 29ம் தேதி இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சட்டசபை பொது தேர்தலுக்கு மொத்தம் ஆயிரத்து 259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. கடந்த தேர்தலை விட 34 வாக்குச்சாவடிகள் குறைவாகும். கடந்த தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 293 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆண், பெண் தனித்தனி வாக்குச்சாவடிகள் பல இருதரப்பினரும் வாக்களிக்கும் வகையில் பொது வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டதால் தான் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் மேல்சபை தேர்தல் சம்பந்தமாக தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த டி.ஆர்.ஓ, பி.ஏ.ஜி, ஆர்.டி.ஓ, அனைத்து தாசில்தார்கள், பி.டி.ஓக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய பயிற்சி முகாம் வரும் 15ம் தேதி விருதுநகரில் நடக்கிறது. ஓய்வு பெற்ற தேர்தல் ஆணைய செயலாளர் பிரம்மம் இவர்களுக்கு மேல்சபை தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய பயிற்சியினை அளிக்கிறார்.
தகவல்:
தினமலர்
|