காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 11-வது செயற்குழு கூட்டம் கடந்த நவம்பர் 10, புதன் அன்று இரவு 8:00 மணியளவில் ஹாபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலி இல்லத்தில் பேரவையின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. அது குறித்து அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஜனாப் பீ.எம்.எஸ். முஹ்சின் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தலைவரின் வரவேற்புரையினை தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன.
தியாகத்திருநாள் சந்திப்பு (EID GATHERING ON EID DAY)
நமது பேரவையின் சார்பில் ஈகைத் திருநாளன்று (10-9-2010) சிறப்பான முறையில் நடத்தப்பட்டது போன்று வரும் தியாகத்திருநாள் அன்றும் (17-11-2010) நடத்துவது என முடிவு செய்யப்பட்டது (சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் தனி செய்தி பார்க்கவும்)
இயற்கை சூழல் நிறைந்த இன்ப சுற்றுலா
நமது பேரவையின் சார்பில் இயற்கை சூழல் நிறைந்த "Kadoorie Farm" என்ற இடத்திற்கு இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 5, 2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இன்ப சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புற்றுநோயினால் நமதூரில் சமீபத்தில் அதிகமானோர் மறைவு - ஒரு ஆய்வு
சமீப காலத்தில் கொடிய வியாதியாக கருதப்படும் புற்று நோயினால் நமதூரில் அதிகமாக இளைஞர்களும், சிறார்களும் மரணத்தை தழுவி வருவதை அன்றாடும் காண்கிறோம். மேலும் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவம் செய்வதையும் அறியும் போது நமதுள்ளம் மிகவும் வேதனை அடைகிறது.
நமது பேரவையும் கத்தார் காயல் நல மன்றமும் ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு முகாம் மற்றும் தடுப்பு முகாம் நடத்துவது அனைவரும் அறிந்ததே.
நமதூரில் அமைந்துள்ள காயல்பட்டணம் ஐக்கிய பேரவை-யின் மூலம் இது விசயமான முழு ஆய்வு செய்யுமாறும், அதற்கு அனைத்து காயல்பட்டணம் மற்றும் வெளிநாட்டு காயல் அமைப்புகளும் ஒத்துழைக்குமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. புற்று நோய் பற்றி முழு ஆய்வு செய்யும் போது நமது அருகாமையில் உள்ள ஊர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், காரணம் என்ன என்பதனை கண்டறிய வேண்டும். மேலும் எமது பேரவையின் சார்பில் காயல்பட்டணம் ஐக்கிய பேரவைக்கு கீழ்காணும் வேண்டுகோளை வைக்கின்றோம்.
காயல்பட்டண ஐக்கிய பேரவை சார்பில் "புற்று நோய் விழிப்புணர்வு கமிட்டி" ஏற்பாடு செய்து விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு சம்பந்தமான செய்திகள் மற்றும் நிகழ்சிகளை அவ்வப்போது நமதூர் மக்களுக்கு எட்ட செய்யுங்கள். இந்த ஏற்பாட்டிற்கு அனைத்து அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஹாங்காங் வாழ் காயல் பெண்மணிகளின் நிதியளிப்பு
ஆண்கள் நமதூரின் நலனிற்காக உடலாலும், பொருளாலும் பங்களிப்பை தருகின்றனர். அதை போல் பெண்களாகிய நாங்களும் பொருளால் சிறிய நிதியளிப்பினை பேரவைக்கு அளிப்போம் என்ற நல்லெண்ணத்தோடு சுமார் 30 பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஹாங்காங் டாலர் என்ற அடிப்படையில் நமது பேரவைக்கு நிதி அளிக்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு பேரவை நன்றியினை நவில்கிறது.
பேரவையின் வரவு-செலவு கணக்கினை பேரவையின் பொருளாளர் வீ.எம்.டி.முஹம்மது ஹசன் சமர்பிக்க செயற்குழு அங்கீகரித்தது.
இரங்கலும், இறைவனிடம் இறைஞ்சுதலும்
சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த இதயம் நிறைந்த இளைய தலைமுறையின் இமாம் ஹாபில் என்.ஹெச். ஷாகுல் ஹமீது அவர்களுக்காகவும், இளம் ஹாபிழ் ஸாலிஹ் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் கூறப்பட்டு அவர்களது மக்பிரத்திற்காக துஆ ஹாபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலி-யால் ஓதப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் விருந்தளிக்கப்பட்டது.
தகவல்:
வீ.எம்.டி.முஹம்மது ஹசன்,
பொருளாளர், KUF-HK. |