தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி நேற்று சென்னையில் உள்ள கட்சி தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் நடத்தினார். நிதி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.என். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் என். பெரியசாமி, அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் மத்திய மந்திரி ராதிகாசெல்வி, ஜெயத்துரை எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் தூத்துக்குடி முன்னாள் எம்.பி. ஜெயசீலன், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி தி.மு.கழக நிர்வாகிகள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. வின் செயல்பாடுகள், அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, சட்டசபை தேர்தலை சந்திப்பது உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் சமீபகாலமாக அதிகரித்திருப்பதாகவும், மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி ஒரு பிரிவாகவும், அதிமுகவில் இருந்து கட்சி மாறி திமுக வேட்பாளராக சென்ற டிசம்பரில் சட்டசபை இடை தேர்தலில் வெற்றிபெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பிரிவாகவும் செயல்படுவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்து வந்தன. அது தவிர வரும் ஜனவரியில் அனிதா ராதாகிருஷ்ணன் - மீண்டும் அதிமுகவில் சேருவார் என்ற புரளிக்கு மத்தியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்:
www.tutyonline.com
[news edited]
|