காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் கீழ் மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் என்ற பெயரிலான திருக்குர்ஆன் மனனப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டும், திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்துள்ள மாணவர் ஒருவருக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் (ஸனது) வழங்குவதற்காகவும், இம்மாதம் 11ஆம் தேதி (நேற்று) பள்ளி வளாகத்தில நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காலை நிகழ்ச்சிகளை மத்ரஸாவின் பள்ளி பாடப்பிரிவு ஆசிரியர் மீராத்தம்பி தொகுத்தளித்தார். காலை நிகழ்ச்சிகளை மத்ரஸா மாணவர் என்.ஏ.சுல்தான் ஹில்மீ கிராஅத் ஓதி துவக்கி வைக்க, பி.எம்.செய்யித் இஸ்மாஈல் அதற்கான தமிழாக்கத்தை வழங்கினார். பின்னர், திருமறை குர்ஆனை இனிமையாக ஓதும் கிராஅத் போட்டி, மனனமாக ஓதும் ஹிஃப்ழுப் போட்டி ஆகிய போட்டிகளும், மாணவர் சிற்றுரைகளும் இடம்பெற்றன.
மாலை நிகழ்ச்சிகளை மத்ரஸா மாணவர் கே.எஸ்.முஹம்மத் இம்ரான் துவக்கி வைக்க, பி.எம்.செய்யித் இஸ்ஹாக் அதன் தமிழாக்கத்தை வழங்கினார். பின்னர், மாணவர் சிற்றுரை, திருக்குர்ஆன் மனனப் போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.
இரவு அமர்வு 07.00 மணிக்குத் துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
பட்டம் பெறும் மாணவர் ஹாஃபிழ் கே.எம்.இம்தியாஸ் அஹ்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, எம்.எம்.எஸ்.காதிர் ஸாஹிப் ஜாஸிம் அதற்கான தமிழாக்கத்தை வழங்கினார்.
பின்னர், ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மத்ரஸா நிர்வாகி பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் மத்ரஸா குறித்த விளக்கவுரையாற்றினார்.
வருட இழப்பின்றி மாணவர்களை திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஹாஃபிழ்களாக்கி, அவர்களின் பள்ளிப்படிப்பிலும் எவ்வித தொய்வுமில்லா வண்ணம் இதுவரை மத்ரஸா செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மத்ரஸாவிலிருந்து இதுவரை பட்டம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்கள் பெரும்பாலும் சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) அடிப்படையிலேயே பொறியியல் மற்றும் இதர பட்டப்படிப்புகளை பயின்று வருவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
புதிய கல்வியாண்டிற்கு இதுவரை 10 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், இன்னும் அதிகளவில் மாணவர்களை தயங்காமல் அனுப்பித் தருமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். வருங்காலத்தில், இஸ்லாமிய அடிப்படைக் கல்வியுடன் கூடிய மாதிரிப் பள்ளிக்கூடத்தை மிகுந்த தரத்துடன் நிர்வாகம் சார்பாகவே நடத்த ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், அவ்வாறு துவக்கப்பட்டால் மாணவர்களின் பள்ளிக்கல்வி குறித்து எவ்வித தயக்கமும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை எனறும் அவர் தனதுரையில் உறுதிபட தெரிவித்தார்.
பின்னர், மத்ரஸாவில் மூன்றாண்டு காலம் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள மாணவர் கே.எம்.இம்தியாஸ் அஹ்மதுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” ஸனது (பட்டம்) வழங்கப்பட்டது. பின்னர், பட்டம் பெற்ற மாணவர் ஏற்புரை வழங்கினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இலங்கையைச் சார்ந்த மவ்லவீ முபாரக் மதனீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, போட்டிகளில் வென்றோருக்கும், மத்ரஸா பாடப்பதிவு, ஒழுக்கம், சிறந்த தேர்ச்சி உள்ளிட்ட அம்சங்களுக்காகவும் மத்ரஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மத்ரஸாவின் ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத், பள்ளிக்கல்வி ஆசிரியர் மீராத்தம்பி, கராத்தே ஆசிரியர் பேட்டை இர்ஃபான், நிகழ்ச்சித் தொகுப்பாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை, ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, வழக்குறைஞர் ஹாஜி எம்.ஐ.மீராஸாஹிப், ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோர் வழங்கினர்.
இறுதியாக, ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் ராஸிக் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு பள்ளியின் முதல் தளத்தில் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஐ.ஐ.எம். தொலைக்காட்சியிலும், அதன் வலைதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை எஸ்.அப்துல் வாஹித், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |