ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணியாற்ற உளவியல் பாடப்பிரிவில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள, துப்புரவுத் தொழிலாளியின் மகள் முத்துமாரி விருப்பம் தெரிவித்தார்.
காயல்பட்டினம் ஓடக்கரையையடுத்துள்ள செல்வவிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ராகவன். இவர் காயல்பட்டினம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் முத்துமாரி. காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியான இவர் கடந்த 09.05.2011 அன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளின்படி, உளவியல் பாடத்தில் 200க்கு 184 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
தந்தை ராகவன், தாய் துர்க்கம்மாள், சகோதரி மாரியம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார் மாணவி முத்துமாரி. இவரது குடும்பத்தில் தந்தை மட்டும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது சகோதரி மாரியம்மாள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதி, முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறார்.
மாநில அளவில் சிறப்பிடம் பெறுவது தான் எதிர்பார்த்ததுதான் என்று கூறும் மாணவி முத்துமாரி, அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். உளவியல் பாட ஆசிரியை வளர்மதி, வகுப்பாசிரியை ஜீவனி, தலைமையாசிரியை திருமலை ஆகியோரளித்த தொடர்ச்சியான ஊக்கத்தின் காரணமாகவே தன்னால் இந்த நிலையை எட்ட முடிந்ததாகவும், அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
டியூஷன் சென்றதில்லை என்று கூறும் அவர், பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் மட்டுமே கற்று இச்சாதனையைப் புரிந்ததாகத் தெரிவிக்கிறார்.
“ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் பணியாற்றி, ஏராளமானோரை கல்வியில் சிறக்க வைக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்... மேற்படிப்பிற்கு யாராவது உதவினால், பொருளாதாரச் சிரமமின்றி நான் நினைத்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பைக் கற்று முடித்து, ஆசிரியராக வேண்டுமென்ற எனது கனவை நனவாக்குவேன்” என்கிறார் சாதனை மாணவி ஆர்.முத்துமாரி. |