தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் மூன்றாவது வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சுங்க அதிகாரிகள் நியமனம் போன்ற சில வேலைகள் இன்னும் முடியாமல் இருப்பதால் கப்பல் போக்குவரத்து துவங்க கால தாமதம் ஆவதாக இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பிப்ரவரி 19ம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுகத்தின் பெயர் மாற்ற விழாவின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இம்மார்க்கத்தில் கப்பலை இயக்கவுள்ள நிறுவனங்களில் ஒன்றான Tradex Shipping நிறுவனத்திடம் காயல்பட்டணம்.காம் பிப்ரவரியில் வினவியது. அப்போது விளக்கம் அளித்த அந்நிறுவனத்தின் பிரதிநிதி - தூத்துக்குடி - கொழும்பு இடையே பயன்படுத்தப்பட உள்ள கப்பல் இந்தியர்களை அழைத்துவர லிப்யாவிற்கு சென்றிருப்பதாகவும், மார்ச் முதல் வாரவாக்கில் தூத்துக்குடி துறைமுகத்தினை அக்கப்பல் வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் சேவை துவக்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து இச்சேவை குறித்த புது அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.
தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர இருக்கும் இச்சூழலில், தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து துவக்க தேதி குறித்து Tradex Shipping நிறுவனத்திடம் காயல்பட்டணம்.காம் மீண்டும் விசாரித்தது. அப்போது தகவல் தந்த Tradex Shipping நிறுவனத்தின் அலுவலர் ஒருவர், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3 - 4 தினங்களில் எதிர்பார்க்கலாம் என்றும், சேவைகள் ஒரு வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். |