நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வைப் பாராட்டி உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் பாராட்டுக் கடிதம் அளித்துள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அன்பின் மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் இம்மடல் தங்களை பூரண உடல் நலமுடனும், உயரிய இஸ்லாமிய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக...
நடைபெற்று முடிந்துள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் இறையருளால் தாங்கள் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, நமது தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளீர்கள்.
தாங்கள் பெற்ற இந்த மதிப்பெண், நம் நகரில் யாரும் இதுவரை பெற்றிராத மதிப்பெண்ணாகும்.
காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் அவர்களின் மகன் ஏ.எம்.எஸ்.இஸ்மத், கடந்த 2009-2010கல்வியாண்டில் 1200க்கு 1169 மதிப்பெண்கள் பெற்றதே இதுவரை சாதனை மதிப்பெண்ணாக இருந்தது. அச்சாதனை இன்று தங்களால் முறியடிக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!
12ஆம் வகுப்பில் தாங்கள் நிச்சயம் சாதனை புரிவீர்கள் என, 10ஆம் வகுப்பில் மாவட்டத்தின் இரண்டாம் மாணவராக தாங்கள் தேர்ச்சி பெற்றபோதே தாங்கள் பயின்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப் எம்.முஹம்மத் ஹனீஃபா அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை தாங்கள் தற்போது இறையருளால் உணர்த்தியிருக்கிறீர்கள்.
இன்ஷாஅல்லாஹ், தங்கள் விருப்பப்படி மருத்துவத் துறையில் கற்று, தலைசிறந்த மருத்துவ நிபுணராக உருவெடுத்து, தாங்கள் நமதூருக்கும், நம் நாட்டிற்கும் சேவை செய்யும் நன்மகனமாகத் திகழ வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த பாராட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தை இக்ராஃ செயலர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் கலீல், துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், சாதனை மாணவர் அமானுல்லாஹ்விடம் இன்று நேரில் சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் பயின்ற பள்ளியைப் பாராட்டி, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபாவிடம் இக்ராஃவின் அக்குழுவினர் பாராட்டுக் கடிதமளித்தனர்.
தகவல்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |