அரசு கவுன்சிலிங் மூலம் தமிழக பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் - இட ஒதுக்கீடு எவ்வாறு
செயல்படுகிறது என்ற விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு தமிழ் நாடு மருத்துவ முதுகலை நுழைவு தேர்வு முடிவில் இட ஒதுக்கீடு குழப்பத்தால் தான் ஏமாற்றப்படக்கூடிய சூழல்
ஏற்பட்டதாகவும், பெரும் முயற்சிக்குப்பிறகே அது சரிசெய்யப்பட்டது என்றும் கூறிய அவர், தற்போது தமிழகத்தில் அமலில் உள்ள ஒதுக்கீடு குறித்த
சரியான விபரம் பலரிடம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இதில் 20 சதவீத ஒதுக்கீடு MBC சமூகத்திற்கும், 19 சதவீத ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடி சமூகத்திற்கும், 26.5 சதவீத ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கும், 3.5 சதவீத ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்
சமூகத்திற்கும் செய்யப்பட்டுள்ளது. மீதி 31 சதவீத இடம் Open Competition (OC) வகையில் நிரப்பப்படும்.
அரசு தேர்வுகள் முடிந்து, தேர்வு முடிவுகளை தொடர்ந்து பொதுவாக பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி அனுமதிக்கான விண்ணப்பங்கள்
பெறப்படும். பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜாதி, மத ஒதுக்கீடு வாரியாக தரப்பட்டியல் (Rank List) அரசு சார்பாக வெளியிடப்படும்.
கவுன்சிலிங் துவங்கப்பட்டப்பின், OC ஒதுக்கீட்டின் கடைசி மதிப்பெண்ணுக்குள் (Cut-off) உள்ள BC, MBC, SC/ST, BC (Muslim), MBC மாணவர்கள் ஒரு கல்லூரி இடத்தினை தேர்வு
செய்யும்போது, அந்த இடம் OC கோட்டாவிலிருந்தே குறைக்கப்படும்.
உதாரணமாக - தமிழகத்தில் சரியாக 1000 மருத்துவ கல்லூரிகளுக்கான் இடம் உள்ளது என எடுத்துக்கொள்வோம். அதில் 310 இடங்கள் OC
கோட்டா சார்ந்தவை. 35 இடங்கள் முஸ்லிம்களுக்கு(BCM) சார்ந்தவை.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். 310வது இடத்தில உள்ள மாணவர் பெற்ற மதிப்பெண் 197.5 என
வைத்துக்கொள்வோம். இப்போது 197.5 மதிப்பெண்ணே கட் ஆப் மதிப்பெண் என எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் 200 மதிப்பெண்
முதல் 197.5 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் முதலில் அழைக்கப்படுவர். இதில் முஸ்லிம் மாணவரும் இருக்கலாம், தாழ்த்தப்பட்ட மாணவரும்
இருக்கலாம். அவர்கள் ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் போது - அந்த இடம் OC கோட்டாவிலிருந்தே குறைக்கப்படும்.
இதில் பொதுவாக குழப்பம்
இருப்பதில்லை.
குழப்பம் எப்போது ஏற்படும் என்றால் Waiting List மாணவர்களுக்கு ஒதுக்கீடு நடக்கும் போது. OC கோட்டாவில் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்த
மாணவர், சில காரணங்களுக்காக அந்த இடத்தை
விடுகிறார் என வைத்துக்கொள்வோம். இச்சூழலில் தான் குழப்பம் நடக்க வாய்ப்புள்ளது.
உதாரணமாக ஒரு BCM மாணவர் 193.5 மதிப்பெண்கள் பெற்று, BCM கோட்டா மூலம் ஒரு கல்லூரியில் அனுமதி பெற்றார் என
வைத்துக்கொள்வோம். இப்போது OC கோட்டாவில் இடம் பெற்ற ஒருவர் தன இடத்தை விட்டுவிடும் சூழலில் ஒரு இடம் காலியாகிறது. அதனை
நிரப்பும் போது - OC கோட்டாவில் Waiting List இல் (உதாரணமாக 191.5 மதிப்பெண்களுடன்) முதல் இடத்தில உள்ள மாணவருக்கு
வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது ஒதுக்கீடு விதிகள்படி தவறாகும்.
சரியான முறை என்னவெனில் ஏற்கனவே BC/BCM/SC/ST/MBC கோட்டா மூலம் - OC கோட்டாவின் Waiting List இல் உள்ள மாணவரை விட அதிக
மதிப்பெண் பெற்று கல்லூரி அனுமதி பெற்றவர் - OC கோட்டா மூலம் இடம் பெற்றதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, முறையாக BC/BCM/SC/ST/MBC
கோட்டா Waiting List பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இது சற்று குழப்பமான விஷயம் என்றாலும் இதில் மாணவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிஸார் தெரிவித்துள்ளார். |