நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு அமீரக காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் பேரருளால் நடப்பாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மொத்த மாவட்டத்தையும் காயல்பட்டினத்தை நோக்கி திரும்பிப் பார்க்கச் செய்துள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு எமது அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதுபோல, நகரளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள எல்.கே. மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ்,
மூன்றாமிடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா,
உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள தீவுதெரு அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஆர்.முத்துமாரி ஆகியோரையும் எம் மன்றம் சார்பில் உளங்குளிர பாராட்டி மகிழ்கிறோம்.
நடந்து முடிந்துள்ள தேர்வில் வெற்றிக் கனியைத் தவறவிட்ட மாணவ-மாணவியர் மனந்தளராது தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற்று, வெகுவிரைவிலேயே உங்களின் வாழ்க்கைப் பாதையில் மற்றவர்களுடன் இணைந்து பயணிக்க மனதார வாழ்த்தி துஆ செய்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
சாளை ஷேக் ஸலீம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |