மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 09.05.2011 அன்று துவங்கியது. அந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி வெற்றி பெற்றது. நேற்று (10/05) நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் கோழிக்கோடு கால்பந்துக் கழக அணியும், கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும் மோதின.
சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மாணவர்:
இப்போட்டியில், நடைபெற்று முடிந்துள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவருக்கு இரண்டு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் அவரைப் பாராட்டி, ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் அதன் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.ஓ.கியாது பொன்னாடை அணிவிக்க, செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா பரிசு வழங்கி கவுரவித்தார்.
பின்னர் துவங்கிய ஆட்டத்தில், கோழிக்கோடு அணியின் ஸ்மித், ஷ்யாம்ஜித் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தனர். 2-0 என்று கோல் கணக்கு இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கோழிக்கோடு அணியின் தடுப்பாட்ட வீரர் ஒருவர் தவறிழைத்ததன் காரணமாக கொச்சி அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஜிபின் ஷெரின் என்ற வீரர் அதை இலகுவாக கோலாக்கினார். அதனைத் தொடர்ந்து கோல் கணக்கு 2-1 என்றானது.
பின்னர் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல் எதுவும் அடிக்காததைத் தொடர்ந்து கோழிக்கோடு அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
|