உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாகத் திகழ்ந்து வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தை, தகுந்த ஏற்பாடுகளுடன் மருத்துவத் துறைக்கும் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்கலாம் எனவும், அதுகுறித்து இக்ராஃ நிர்வாகம் பரிசீலிக்க வேண்டுமெனவும் சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் செயற்குழு தெரிவித்துள்ளது.
கூட்ட நிகழவுகள் குறித்து அவ்வைமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்,
எமது காஹிர் பைத்துல்மாலின் 24ஆவது செயற்குழுக் கூட்டம் 21.04.2011 வியாழன் பின்னிரவு 08.00 மணியளவில் ஜனாப் ஹாஜி எஸ்.எம்.நயீமுல்லாஹ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹாஜி என்.டி.ஷைக் அப்துல் காதிர் அவர்கள் தலைமை தாங்கினார்.
KBM உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.எம்.பி.செய்யத் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கம் செய்தார். உறுப்பினர்களின் நகர் நலன் குறித்த கருத்து பரிமாற்றங்களை தொடர்ந்து பின் வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 01 - பெயர் மாற்றம்:
எமது அமைப்பு "காஹிர் பைத்துல்மால்" எனும் பெயரில் சிறப்பாக நடந்து வருகிறது. சவூதி நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, அவசரத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின் " ரியாத் காயல் நற்பணி மன்றம்" (ரக்வா) என்னும் பெயருடன் நற்பணிகளை தொடருவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மன்றத்தின் மின்னஞ்சல் kbmriyadh@gmail.com மற்றும் வலைதளம் www.kbmriyadh.com ஆகியவற்றில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்படும்.
தீர்மானம் 02 - இலச்சினை:
புதிய இலச்சினை வடிவமைக்கும் பொருட்டு சமுக ஆர்வலர்கள் எமது அமைப்பிற்கு தங்களின் இலச்சினையை அனுப்பித்தருமாறும் அதிலிருந்து தேர்வு செய்யப்படும் இலச்சினையை (லோகோ) புதிதாகப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 03 - இக்ராஃ நிர்வாகச் செலவில் பங்களிப்பு:
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு நிர்வாகச் செலவு அதிகரித்து இருப்பதால் இவ்வருட முதல் ரூபாய் 16,000/- ஆக கூட்டி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இக்ராஃ கல்விச் சங்கம் தொய்வின்றி தொடர்ந்திட, அதன் நிர்வாகச் செலவிற்கு பங்களிக்காத உலக காயல் நற்பணி மன்றங்கள் தங்களின் கணிசமான பங்களிப்பை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 04 - இலவச சீருடை, நோட் புக்:
வழமை போன்று இக்ராஃ அமைப்பின் ஒத்துழைப்போடு இவ்வருடமும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை, நோட் புக் வழங்குவது என்று தீர்மானிக்கபட்டது.
தீர்மானம் 05 - இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு வேண்டுகோள்:
இக்ராஃ கல்விச் சங்கம் எப்படி கல்வித்துறையில் அனைத்துலக காயல் நலமன்றங்களின் ஒருங்கிணைப்பாக செயல்படுகிறதோ அதுபோல, அதன் அலுவலகத்தை மேலும் விரிவுபடுத்தி, முதற்கட்டமாக மருத்துவத்திற்கு தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கான பணிச்சுமைகளை பகிர்ந்து கொள்ளும் முழு நேர உதவி அலுவலர் நியமனம் செய்வது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளை எம்மன்றம் கேட்டுகொள்கிறது.
இது தொடர்பாக எம் மன்றத்தின் சார்பில் அது வெளியிட்ட சிறப்பு மலரில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. (அதனைப் பார்வையிட இங்கே சொடுக்குக!) .
தீர்மானம் 06 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் ஏழை மக்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களை பரிவுடன் பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று தாரளமாக உதவிய அன்பு சகோதரர்களுக்கும் மன்றம் நன்றிகளை தெரிவிக்கிறது.
(அ) கழுத்து கட்டியால் அவதிப்படும் ஒருவருக்கு ஆபரேஷன் வகைக்கு ரூபாய் 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஆ) முழங்கால் ஆபரேஷன் வகைக்கு ஒருவருக்கு ரூபாய் 5,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(இ) இருதய நோய் ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு ஒருவருக்கு ரூபாய் 10,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(ஈ) இருதய நோய் ஆபரேஷன் சிகிச்சைக்கு ஒருவருக்கு ரூபாய் 15,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
(உ) அவசர அவசிய தேவைக்கு உதவும் முகமாக ஒரு சகோதரிக்கு ரூபாய் 20,000/- வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட நிறைவு:
நன்றியுரைக்கு பின் இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூறப்பட்டு, இறையருளால் இனிதாய் நிறைவுற்றது எம் மன்ற செயற்குழுக் கூட்டம், அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி S.M.முஹம்மத் லெப்பை,
துணைச் செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா. |