கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை பாக்கெட் மாவுகளின் தரம் குறித்த சந்தேகங்கள் இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக பின்வருமாறு:-
தமிழகம் முழுவதிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள், இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், ஆய்வு முடிவுகள் பத்திரிகைகள் சொல்லும் அளவுக்கு மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவுகள் தரம் குறைந்து காணப்படுவது குறித்தும், இதில் உணவு தயாரித்து உண்ணும் குடும்ப அங்கத்தினர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இந்த மாவுகளைத் தன்னார்வ அமைப்புகள் சோதனை செய்து பார்த்ததில் இதில், கடுமையான நோய்களை ஏற்படுத்தும் "இ-கோலி' என்ற பாக்டீரியா இருப்பதாக அந்த அமைப்பு ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தது. இப்போது தமிழகப் பொதுச் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வுகளின் முடிவு, பத்திரிகைகளில் கூறப்பட்டதைப் போன்று அத்தனை மோசமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வு, முறைப்படி செய்யப்பட்டதாக இல்லை என்பதால் இதனை ஏற்றுக்கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்படுகிறது. ஏனென்றால், தமிழகம் முழுவதிலும் வெறும் 340 அரிசி மாவு பாக்கெட்டுகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையின் அளவை வைத்து சென்னை பெருநகரில்கூட முழுமையான ஆய்வுசெய்ய முடியாது. ஏனென்றால், அந்த அளவுக்கு இட்லி மாவு, தோசை மாவு பாக்கெட்டுகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இவர்கள் மாதிரி (சாம்பிள்) எடுத்த எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் பாக்கெட் இட்லி, தோசை மாவு தயாரிப்போர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.
இந்த நிலைமையில், இவர்கள் வெறும் 340 பாக்கெட்டுகளை மட்டுமே சோதித்திருப்பது சரியான ஆய்வு முடிவாக அமையாது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர, வேறு உணவு உண்ணாத ஒரு சமூகம் வாழ்ந்து மறைந்தது. அடுத்ததாக, ஓட்டல் நாகரிகம் வந்தபோது, மெல்லமெல்ல ஒரு நாளின் ஒரு வேளை உணவை ஓட்டல்களில் உண்கிற வழக்கம் தலையெடுத்தது. இப்போது ஒரு குடும்பத்தின் தலைவன் தலைவி இருவருமே உழைக்க வேண்டியது அவசியமாகிப் போனதாலும், டி.வி. பார்ப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை என்றாகிவிட்டதாலும், அரைத்து விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை வாங்கிவைத்து, பசிக்கிறபோது இட்லி, தோசை ஊற்றிச் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ரேஷன் அரிசியை நம்பியிருக்கிறார்கள். மேலும், இந்த அரிசியை ஊறவைக்கும்போது, அந்த நீரின் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துவதும் இல்லை. இதனால்தான் "இ-கோலி' போன்ற கிருமிகளுக்குப் புகலிடமாகிவிடுகிறது. மக்காச்சோளம், வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட, குளோரின் சேர்க்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுவதில்லை.
இட்லி, தோசை மாவு புளிப்பேறுவது என்பது அதில் உள்ள நீரின் தூய்மையைப் பொறுத்தது. சிலரது கைகளில் சுரக்கும் வியர்வை, தூய்மையின்மை ஆகியவற்றால், அந்தக் கைகள் பட்டால் மாவு விரைவில் புளிப்பேறி கெட்டுப்போகும்.
ஆனால், இப்போதோ கடைகளில் விற்கப்படும் இந்த பாக்கெட் மாவு விரைவில் புளித்துப்போகக்கூடாது என்பதற்காக ரசாயனங்களைச் சேர்க்கும் வணிகத் தந்திரங்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இது நிச்சயமாக உடல் நலனுக்குத் தீங்கானது. இந்த மாவு என்றைக்கு அரைக்கப்பட்டது என்பதற்கான தேதி இல்லாமல் விற்கப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. எல்லோரும் இன்றைக்குத்தான் அரைத்த மாவு என்றே விற்கிறார்கள்.
வீட்டுத் தொழிலாகச் செய்வோர் இதைச் செய்துகொண்டிருக்க, பெரும் நிறுவனங்கள் இதைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலர் மாவாகப் பாக்கெட்டுகளில் விற்கின்றன. இவற்றில் நீங்கள் தூய்மையான தண்ணீரைக் கலந்து, பயன்படுத்தி, ரவா இட்லி, தோசை தயாரித்துக் கொள்ள முடியும். ஆனால் அத்தகைய தொழில்நுட்பத்தில் இந்த மாவு தயாரிக்க அதிக முதலீடு தேவை.
ஆனால், இன்றைய உயிரி-தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) வளர்ந்து இருக்கும் நிலையில், இந்த மாவுகளை எத்தகைய தண்ணீரில் எவ்வாறு தூய்மையாகத் தயாரிக்க முடியும், இந்த மாவைப் பாக்கெட்டில் அடைக்கும் முன்பாக இதன் தூய்மை, புளிப்புத்தன்மையை எவ்வாறு தாங்களே சோதிக்க முடியும் என்பதையெல்லாம் எளிமைப்படுத்த வழியுள்ளது. இந்த அறிவியல் நுட்பங்களைச் சொல்லித் தரவும், இந்தப் பயிற்சியில் சான்று பெற்றவர்கள் மட்டுமே இட்லி, மாவு தோசை மாவு தயாரிக்க முடியும் என்கிற நிபந்தனையை உருவாக்கவும் அரசால் முடியும்.
மேலும், இந்த மாவு எப்போது தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தையும் முத்திரையிட வகை செய்ய வேண்டும். மேலும், இத்தகைய மாவுகளைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும். எல்லா மாதிரிகளையும் சென்னைக்குக் கொண்டுசென்று ஆய்வு செய்தல் நடைமுறைக்கு ஒத்துவராது.
வெறும் 30 ரூபாய்க்கு மாவு வாங்கினால்போதும், குடும்பத்தினர் அனைவரும் தோசை அல்லது இட்லி சாப்பிட்டுவிட முடியும் என்பதாலும், அரிசி உளுந்து ஊற வைக்கும் வேலை, அதை அரைக்கும் வேலை மிச்சம் என்பதாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய மாவு பாக்கெட் விற்பனை அதிகமாக இருக்கிறது. உணவுப் பொருள் சட்டத்தின் எந்த விதிமுறைகளையும் இந்த மாவு தயாரிப்பவர்கள் பின்பற்றுவதில்லை.
"கஞ்சி குடிப்பதற்கு இல்லார் - அதன் காரணம் இவை எனும் அறிவும் இல்லார்' என்பார் பாரதி. கஞ்சி குடிக்க வசதி இருந்தும்கூட, சோம்பலால், இத்தகைய மாவுகளை வாங்கிச் சாப்பிட்டு, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதன் காரணம் இதுவெனும் அறிவும் இல்லாமல் இருக்கிறோம் என்பதுதான் வேதனைக்குரியது.
சுகாதாரத்தைப் பொருத்த வரை, மக்கள் தவறு செய்தாலும் அதைத் தடுத்து சுகாதாரக் கேடுகள் அரங்கேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனால் தான் சுகாதாரத் துறையை நாம் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று அழைக்கிறோம். பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் இந்தப் பிரச்னையில் அரசு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் போனால், தொற்றுநோய் பரவிப் பேரிழப்புகளை நாம் சந்திக்க நேரிடக்கூடும்.
இவ்வாறு தினமணி நாளிதழின் இன்றைய தலையங்க கட்டுரையில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. |