ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி மாணவி கே.ரேகா (ரெஜிஸ்டர் எண்: 425022) - 1190 மதிப்பெண்கள் பெற்று மாநில முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார்.
இன்று காலை சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 8:00 மணி முதலே ஊடக பிரதிநிதிகள் குவிய துவங்கினர்.
காலை 9:00 மணி அளவில் மார்ச் மாதம் தேர்வு எழுதியே மாணவர்களின் பரீட்சை முடிவுகள் அடங்கிய குறுந்தகடு - பதிவு செய்த ஊடகங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் இணையதளங்கள் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் மாணவர்களால் பெறப்பட்டது.
ப்ளஸ்-2 தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 மாணவர்கள் தேர்ச்சி ஆனார்கள். இது 85.9 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 85.15 சதவீதமாகும்.
பிளஸ்-2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.3 சதவீதம். முதல் 3 இடங்களை பிடித்த 6 பேரில் 4 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் இரண்டாவது இடத்தை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் எஸ்.வேல்முருகன் (ரெஜிஸ்டர் எண்: 606524) பெற்றுள்ளார். அவர் 1200-க்கு 1187 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மூன்றாவது இடத்தை 1186 மதிப்பெண்கள் எடுத்து 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
1. டி.வித்யா சகுந்தலா (ரெஜிஸ்டர் எண்: 143243): எஸ்.ஜே.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, மகராஜா நகர், நெல்லை
2. என்.ரகுநாதன் (ரெஜிஸ்டர் எண்: 223725): டி.எம்.எச்.என்.யூ. மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளி, முத்து தேவன்பட்டி, பெரியகுளம்
3. பி.சிந்துகவி (ரெஜிஸ்டர் எண்: 394983): குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
4. பி.எஸ்.ரேகா (ரெஜிஸ்டர் எண்: 425023): ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன், ஓசூர்
புகைப்படங்கள் உதவி:
ஐ.செய்யத் மீரான் |