நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு திருவனந்தபுரம் காயல் நல மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நடப்பாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, இறையருளால் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவரும், எம் மன்ற உறுப்பினர் ஜனாப் அபுல்ஹஸன் அவர்களின் அன்பு மகனுமான ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கு எங்கள் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எம் மன்ற உறுப்பினரின் அன்பு மகன் இவர் என்பது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்வைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. தன் மகனின் கல்வி முன்னேற்றம் விஷயத்தில் அவர் காட்டிய அயராத அக்கறைக்கு வல்ல இறைவன் அரும்பலனைத் தந்துள்ளான், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
மேலும், உயிரியல் பாடத்தில் மாநிலத்தின் மூன்றாமிடம் பெற்ற மாணவியாக தேர்வான காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த ஆர்.முத்துமாரி என்ற மாணவிக்கும் எமது மன்றம் தனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
இக்கல்வியாண்டில் நமதூர் மாணவ-மாணவியர் 94.55 தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில் நூறு சதவிகித தேர்ச்சி காண வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர், டியூஷன் ஆசிரியர்கள் மற்றும் இக்ராஃ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் உள்ளிட்ட நகர பொதுநல அமைப்புகளுக்கு எமது மன்றத்தின் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் J.A.செய்யித் ஸதக்கத்துல்லாஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
திருவனந்தபுரம், கேரள மாநிலம். |