வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டை காயல்பட்டினத்தில் சிறப்புற நடத்திட காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நேற்று (07/05) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாட்டை காயல்பட்டினத்தில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 07.05.2011 அன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தின் தம்பி, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், டாக்டர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எல்.செய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அறிமுகவுரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளரும், காரைக்கால் அண்ணா கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்களும், முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன:-
தீர்மானம் 1 - ஜூலை 08,09,10இல் மாநாடு:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டை எதிர்வரும் 2011 ஜூலை மாதம் 08, 09, 10 ஆகிய மூன்று தினங்களில் காயல்பட்டினத்தில் சிறப்புற நடத்துவதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - மாநாட்டு அலுவலகம்:
சமுதாயப் புரவலர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்களுக்கு சொந்தமான, 28, பிரதான வீதி, காயல்பட்டினம் என்ற முகவரியிலுள்ள “செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடம்” மாநாட்டு அலுவலகமாக செயல்படும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - ஆலோசனைக் குழு:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டு ஆலோசனைக் குழு தலைவராக ஹாஜி எஸ்.அக்பர்ஷா தேர்வு செய்யப்பட்டார். நகரின் அனுபவமிக்கவர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.
தீர்மானம் 4 - வரவேற்புக் குழு:
மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் காயல் நல மன்றங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வரவேற்புக் குழு உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.
தீர்மானம் 5 - ஏற்பாட்டுக் குழு:
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவராக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் செயலாளராகவும்,
கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் பொருளாளராகவும்,
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை ஆகியோர் துணைத்தலைவர்களாகவும்,
ஹாஜி எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானம் 6 - இதர குழுக்கள்:
விழாக்குழு தலைவராக காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், மலர் மற்றும் நூல் வெளியீட்டுக்குழு தலைவராக காயல் மகபூப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்படி குழுக்களின் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் இம்மாநாட்டின் காப்பாளர்களாக இருப்பர்.
கண்காட்சிக் குழு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவு, விருந்தோம்பல் குழு, மகளிர் அரங்க ஏற்பாட்டுக் குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்குள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்வலர்கள் வரவேற்பு:
இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டு பணியில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் காயல்வாசிகள், அறிவிக்கப்பட்டுள்ள மாநாட்டுக் குழுவினரைத் தொடர்புகொண்டு 09.05.2011 தேதிக்குள் தமது விருப்பத்தைத் தெரிவித்தால் குழுக்களில் இடம்பெற வாய்ப்பளிக்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் (+91 95000 35786), காயல் அமானுல்லாஹ் (+91 94433 42222) ஆகியோரை அவர்களது கைபேசியில் தொடர்புகொண்டும் பெயர் பதிவு செய்யலாம்.
நூல் வெளியீடு:
இம்மாநாட்டில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வு நூல், இலக்கிய இணையம், மாநாடு சிறப்பு மலர் வெளியிடவும், காயல்பட்டினம் புலவர்களின் சில நூல்கள் மறுபதிப்பு செய்தும் வெளியிடப்படவுள்ளது.
கலந்துகொள்வோர்:
மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் பங்குற்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கவுள்ளனர்.
கட்டுரைப் போட்டி மற்றும் மாநாட்டு அரங்கங்கள்:
இம்மாநாட்டை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரைப் போட்டியும் நடத்தப்படவுள்ளது. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், சமயம் வரலாறு, பண்பாடு இதழியல், நாட்டுப்புறவியல், தற்கால இலக்கியம், பெண்ணியம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வரங்கமும்,
காயல்பட்டினம் நகர வரலாறு, காயல்பட்டினம் புலவர்களின் இஸ்லாமிய தமிழிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கம்,
சன்மார்க்க அறிஞர்கள் பங்கேற்கும் ஆன்மிக அரங்கம், ஊடகம் என்ற தலைப்பில் கவியரங்கம், மகளிர் அரங்கம், சமூக முன்னேற்றத்திற்கான பட்டிமன்றம், இசையரங்கம், மாணவ சமுதாயத்தினரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் மாநாட்டில் இடம்பெறவுள்ளன.
இலக்கியவாதி காயலர்களுக்கு விருது:
இம்மாநாட்டில், காயல்பட்டினத்தின் முன்னேற்றத்திற்காகவும், இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காகவும் பணிகளாற்றி வருபவர்களிலிருந்து தலா 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்மாமணி, சேவைச் செம்மல் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேற்கண்டவாறு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி நன்றி கூற, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் கூட்டம நிறைவுற்றது.
கூட்டத்தில், நகரின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சார்ந்தவர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், இலக்கியவியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட 90 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய பலர் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13, 14, 15 தேதிகளில் காயல்பட்டினத்தில் வரலாற்று சிறப்போடு நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமி தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாட்டு நிகழ்வுகளை நினைவுகூர்ந்ததோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டையும் சிறப்புற நடத்த வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் தெரிவித்தனர்.
தகவல்:
K.A.M.முஹம்மத் அபூபக்கர்,
ஒருங்கிணைப்பாளர்,
இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு. |