ஓட்டு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி ஏஜென்ட்கள் வெறும் கையுடன் வந்தால்போதும். சாப்பாடு முதல் எழுதும் பேப்பர், பேனா வரை வழங்கப்பட்டு விடும். முதலில் வந்த ஏஜென்ட் திரும்ப சென்றால் மீண்டும் உள்ளே வர முடியாது என்று தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரியுடன் மண்டல அளவில் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஓட்டு எண்ணிக்கையின்போது செயல்படும் விதம் குறித்து முழுமையாக விளக்கி விட்டார்.
இதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் முறையிலும் ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை ஆலோசனை மேற்கொள்ளும் வகையில் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த தேர்தலிலும் இது போன்று ஓட்டு எண்ணிக்கைக்கு பல கட்ட பயிற்சிகள் நடந்தது இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் ஓட்டு எண்ணிக்கையை மிக கவனமாக நடத்த வேண்டும் என்று மீண்டும், மீண்டும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. அதனை தொகுதி தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்கள் மூலம் ஏஜென்ட்களுக்கு தெரிவித்து விடவேண்டும் என்றும் கண்டிப்பு உத்தரவு போட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தேர்தல் அதிகாரி பஷீர் கூறியதாவது:-
*** வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் இந்த முறை ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் போது எதுவும் கையில் கொண்டுவரக் கூடாது.
*** தீப்பற்றக் கூடிய பொருட்கள் எடுத்துவரக் கூடாது.
*** தீப்பெட்டி, சிகரெட் உள்ளிட்ட எந்த பொருளும் ஓட்டு எண்ணிக்கை இடத்தில் அனுமதி இல்லை.
*** தண்ணீர் பாக்கெட் கூட கொண்டுவரக் கூடாது.
*** செல்போனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
*** வேட்பாளர்களின் ஏஜென்ட்களுக்கு காலை டிபன், மதியம் உணவு போன்றவை தொகுதி தேர்தல் அதிகாரி மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
*** இலவசமாக பேனா பேப்பர் வழங்கப்பட்டு விடும்.
*** ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் உள்ளே ஒரு முறை சென்றால் முடியும் வரை இருக்க வேண்டும். வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே வர தடை விதிக்கப்படும்.
*** எம்.பி, எம்.எல்.ஏ உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு ஓட்டு எண்ணும் இடத்திற்கு வருவதற்கு அனுமதி கிடையாது.
*** காலை 07.00 மணிக்கு முன்பாக வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் அனைவரும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு வந்துவிட வேண்டும்.
*** சட்டையில் வேட்பாளரின் ஏஜென்ட் என்பதற்கு வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயம் குத்தி இருக்க வேண்டும்.
*** தபால் ஓட்டுகள் தனியாக ஒரு மேஜையில் எண்ணப்படும். அதற்கு வேட்பாளர் ஒரு ஏஜென்ட் நியமிக்கலாம்.
*** ஒரு வேட்பாளர் ஓட்டு எண்ணிக்கையின்போது 10 டேபிளுக்கு தலா ஒரு ஏஜென்ட், தபால் ஓட்டிற்கு ஒரு ஏஜென்ட், தொகுதி தேர்தல் அதிகாரி மேஜை முன்பு ஒருவர் என மொத்தம் 12 ஏஜென்ட்களை வேட்பாளர்கள் நியமனம் செய்து கொள்ளலாம்.
நன்றி:
தினமலர் (08.05.2011) |