காயல்பட்டினத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறது துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி.
இப்பள்ளியின் கட்டிடங்களுக்கு சொத்து வரிவிலக்கு கிடைத்திடவும், கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு உரிய கதவிலக்கம் தரக்கோரியும் காயல்பட்டினம் நகர்மன்ற செயல் அலுவலரிடம் அப்பள்ளி சார்பில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நடத்தி வரும் துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னாலெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அறிவுத்திறன் குறைந்த இயலாநிலைக் குழந்தைகளுக்கு “துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி” சிறந்த சேவை செய்து கொண்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.
எங்கள் நிறுவனத்தின் சார்பாக துளிர் வளாகத்தில் மன வளர்ச்சி குன்றிறோர் பள்ளி உபயோக கட்டிடம் அரசு அனுமதியின் படி வழங்கப்பட்டுள்ள கட்டிட அனுமதி உத்தரவு ஆணையின்படி கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் விலக்கு அளித்து, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு உரிய கதவிலக்கம் வழங்கி உத்தரவிட வேண்டி செயல் அலுவலர், காயல்பட்டணம், மூன்றாம் நிலை நகராட்சிக்கு நம் துளிரிலிருந்து உரிய விண்ணப்பம் செய்திருந்தோம்.
மேலும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக இதன் காரணமாய் காயல்பட்டணம், மூன்றாம் நிலை நகராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தை நேரிலும் தொலைபேசி உரையாடல் மூலமாகவும் பலமுறை தொடர்பு கொண்டும் அலுவலகத்திலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே எங்கள் நிறுவனத்தின் சார்பாக இன்று காலை “துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி”யின் நிறுவனர் திரு. எச்.எம்.அஹமது அப்துல் காதர், செயலாளர் லயன் எம்.எல்.சேக்னா லெப்பை, மறுவாழ்வு திட்டப் பணிகள் தலைவர் திருமதி அ.வஹீதா, பள்ளியின் திட்ட ஒருங்கினைப்பாளர் திருமதி சித்தி ரம்ஜான் மற்றும் துளிர் பள்ளி பணியாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் செயல் அலுவலரைச் சந்தித்தோம்.
எம் பள்ளியால் அரசு அனுமதியின்படி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்துவதில் விலக்கு அளித்தும், கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு உரிய கதவிலக்கங்களைத் தனித்தனியே வழங்கி உத்தரவிடவும் ஆவண செய்யுமாறு அப்போது கோரிக்கை வைத்தோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |