ஒரு தொகுதிக்கு ஓட்டு எண்ணிக்கைக்கு ஒரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதால் ஏற்கனவே தூத்துக்குடியில் 5 பேர் உள்ளனர். புதியதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 6 பேரும் வரும் 11ஆம் தேதி தூத்துக்குடி வருகின்றனர். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வரும் 09ஆம் தேதி பயிற்சி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் வரும் 13ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகளுக்குரிய முன்னேற்பாடுகள் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மகேஷ்வரன் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் 6 தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் தொகுதி வாரியாக தனித்தனியாக அறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை முக்கிய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய மென்பொருள் மூலம் ஓட்டு மொத்த கணக்கீடு:
இதற்கிடையில் ஓட்டு எண்ணிக்கையை மிகவும் கவனமாக நடத்தும் வகையில் இந்த முறை இதில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு பல கட்டமாக தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறது.
நேற்று காலை தமிழகம் உட்பட ஐந்து மாநில தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி தேர்தல் அதிகாரிகள், எலக்ஷன் பி.ஏ ராஜேந்திரன், தாசில்தார் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓட்டு எண்ணிக்கையின்போது மொத்த வாக்குகளைக் கூட்டுவதற்கு ஜெனிசிஸ் என்னும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளை பதிவு செய்தவுடன் தானாக டோட்டல் போடும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கினர். ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரிகளும் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வைத்து நேரடியாக டோட்டல்களை சரிபார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு ரவுண்ட் வாரியாக டோட்டல் போடும் பணியை ஜெசிசிஸ் மேற்கொள்ளும். இது சம்பந்தமாக விரிவாக விளக்கப்பட்டது.
புதிய பெண் அப்சர்வர் நியமனம்:
ஓட்டு எண்ணிக்கையின்போது ஒரு தொகுதிக்கு வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தமட்டில் ஏற்கனவே தேர்தல் பணி மற்றும் தேர்தல் செலவு கணக்கு பணிகளில் 5 வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 15 நாட்கள் வரை இவர்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் இவர்கள் தங்கள் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
ஓட்டு எண்ணிக்கைக்கு இவர்கள் மீண்டும் வருகின்றனர். இம்மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருப்பதால் ஏற்கனவே பணியில் உள்ள 5 அப்சர்வர்கள் தவிர புதியதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த வனத்துறை செயலாளர் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலாநாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் வரும் 11ஆம் தேதி தூத்துக்குடி வருகின்றனர். விளாத்திகுளம் தொகுதிக்கு சஞ்சய்குமார், தூத்துக்குடி தொகுதிக்கு அன்வர்அலி, திருச்செந்தூர் தொகுதிக்கு சரவன்புரமோத், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு போர்க்கர், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அல்கேஷ்குமார் சர்மா, கோவில்பட்டி தொகுதிக்கு ஷீலாநாக் ஆகியோர் ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுவர். ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக இவர்கள் கண்காணிப்பு செய்வர். இவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் ஒரு ரவுண்ட் வாரியாக முடிவுகள் வெளியிடப்படுகிறது.
வீடியோ கான்ஃபரன்சில் தொடரும் ஆலோசனை:
இதற்கிடையில் ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கூடுதல் தேர்தல் ஆணையர் அமுதா ஆய்வு செய்கிறார்.
ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் சம்பந்தமாக அவர் முழுமையாக ஆய்வு மேற்கொள்வார் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை (08ஆம் தேதி) தமிழகம் உட்பட ஐந்து மாநில மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் டெபுடி கமிஷனர் ஜெயப்பிரகாஷ் ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்துகிறார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஷ்வரன், எஸ்.பி. செந்தில்வேலன் மற்றும் 6 தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஓட்டு எண்ணிக்கைஊழியர்களுக்கு பயிற்சி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் டெபுடி தாசில்தார் லெவலில் உள்ள ஒருவர், அசிஸ்டென்ட் ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை சம்பந்தமாக பயிற்சி வரும் 09ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மொத்தம் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுத்தபடும் 140 பேர் இந்த பயிற்சியினை பெறுகின்றனர்.
தேர்தல் ஆணையம் ஓட்டு எண்ணிக்கை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தெரிவித்த விபரங்களை பயிற்சியின் போது இவர்களுக்கு அதிகாரிகள் விளக்குவர்.மாலையில் ஓட்டு எண்ணிக்கை பணியை ஆய்வு செய்யும் மைக்ரோ அப்சர்வர்கள் 80 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
நன்றி:
தினமலர் (07.05.2011) |