ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கமாண்டோ படையினர் ஒசாமா இருந்த அறைக்குள் நுழைந்தபோது, அவர் துப்பாக்கியுடன் எதிர்கொண்டார் என்று ஓர் அமெரிக்க அதிகாரியும், ஒசாமா நிராயுதபாணியாக இருந்தார் என்று மற்றொரு அதிகாரியும் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
ஒசாமா கொல்லப்பட்டபோது அவருடன் சேர்ந்து 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லை. அவர்கள் கமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தவும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி கூறியதாக அந்நாட்டு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காமாண்டோக்களுக்கும் - ஒசாமா, அவருடன் இருந்தவர்களிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒசாமா ஏகே 47 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கியுடன் இருந்தார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கார்னி இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,ஒசாமா இருந்த அறைக்குள் காமாண்டோக்கள் நுழைந்தபோது பெண் ஒருவர் அவரைக் காப்பாற்ற முயன்றார். காமாண்டோக்கள் அந்தப் பெண்ணைக் காலில் சுட்டு வீழ்த்திவிட்டு, ஒசாமாவைச் சுட்டு வீழ்த்தினர். அவர் ஆயுதம் இன்றி இருந்தார் என்று தெரிவித்தார்.
இப்படி அமெரிக்க அதிகாரிகளே ஒசாமா கொலை குறித்து முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்து வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நன்றி:
தினமணி (06.05.2011) |