காயல்பட்டினம் மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வருகிறது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி. இக்கல்லூரி மாணவியரால் உருவாக்கப்பட்ட பொருட்களடங்கிய “சன்மார்க்க சரித்திர கண்காட்சி” மே மாதம் 01, 02 தேதிகளில் நடைபெற்றது.
இக்கண்காட்சி குறித்து அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியரின் தனியாத ஆர்வத்தில், இஸ்லாமிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நகரின் முக்கிய சரித்திரப் பகுதிகள் அழகிய முறையில் தயாரிக்கப்பட்டு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
01.05.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெண்களுக்கும்,
02.05.2011 திங்கட்கிழமை காலை 10.0 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஆண்களுக்கும் கண்காட்சி நடைபெற்றது.
துவக்க நாள் கண்காட்சியை கல்லூரியின் கண்காணிப்பாளர் (ரக்கீபா) ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் ஆண்கள் கண்காட்சியை கல்லூரியின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ, ஜெரூஸலமிலுள்ள பைத்துல் மக்தஸ், அஜ்மீர் காஜா நாயகம் தர்ஹா, காயல்பட்டினம் லெப்பப்பா தர்ஹா, ஸாஹிப் அப்பா தைக்கா, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா, ஜாஃபர் ஸாதிக் அப்பா தைக்கா, மஹ்ழரா, புகாரிஷ் ஷரீஃப், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா உள்ளிட்ட ஸ்தலங்கள் மாணவியரால் நேர்த்தியாக செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.



முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பழைய கட்டிட தோற்றம், தற்போதைய கட்டிட தோற்றம் மற்றும் விரைவில் வெளியூர் மாணவியருக்காக கட்டப்படவுள்ள மாணவியர் விடுதி (ஹாஸ்டல்) மாதிரி தோற்றம் உள்ளிட்டவை தத்ரூபமாக மாணவியரால் வடிவமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியின் சிறப்பம்சமாக, பெரும்பாவங்கள் செய்த மனிதர்கள் மரணித்து மண்ணறை சென்றதும் அனுபவிக்கவுள்ள வேதனைகள் என ஹதீதுகளில் இடம்பெற்ற செய்திகளை நேரடி காட்சியாக இருட்டறையில் வடிவமைத்திருந்தனர். அறைக்குள் சென்றதுமே ஒருவகையான மன இறுக்கம் ஏற்பட்டது.


அதனையடுத்த அறையில், நற்கருமங்கள் செய்த மனிதர் “புது மாப்பிள்ளை போன்று உறங்கு” என்று சொல்லப்பட்டு நிம்மதியாக உறங்குவது போல காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் சென்றதும் நறுமணம் கமழ்ந்தது.

மேலும், கல்லூரி மாணவியரால் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட சன்மார்க்க கையேட்டுப் பிரதிகள், கல்லூரி விற்பனைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள சொற்பொழிவு குறுந்தகடுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.


கண்காட்சியை திரளான பெண்களும், ஆண்களும் தனித்தனியே கண்டு பயனுற்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியையர் மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிப் பொருட்கள் பதிவு செய்யப்பட்ட அசைபடக் காட்சி காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான முஹ்யித்தீன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அசைபடக் காட்சிகளைக் காண பின்வரும் இணைப்புகளை சொடுக்குக!
பாகம் 1
பாகம் 2
அசைபடக் காட்சிகள் பதிவேற்றம்:
முஹ்யித்தீன் டிவி சார்பாக,
ஹாஜி ஜே.எம்.அப்துர்ரஹீம் காதிரீ,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |