தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. மாவட்டத்தில் 95 சதவிகித மாணவ, மாணவிகள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றன. இத்தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.சு. பரிமளா திங்கள்கிழமை தூத்துக்குடியில் வெளியிட்டார்.
மாவட்டத்தில் 8,225 மாணவர்கள், 10,291 மாணவிகள் என மொத்தம் 18,516 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில், 7,593 மாணவர்கள், 10,064 மாணவிகள் என மொத்தம் 17,657 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவிகித தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 92 சதவிகிதமும், மாணவிகள் 97.79 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 5,600 மாணவர்கள், 6,950 மாணவிகள் என மொத்தம் 12,550 பேர் தேர்வு எழுதினர். இதில், 5,152 மாணவர்கள், 6,777 மாணவிகள் என மொத்தம் 11,929 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 95 சதவிகித தேர்ச்சி ஆகும்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2,625 மாணவர்கள், 3,341 மாணவிகள் என மொத்தம் 5,966 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில், 2,441 மாணவர்கள், 3,287 மாணவிகள் என மொத்தம் 5,728 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 96 சதவிகித தேர்ச்சி ஆகும்.
இந்தத் தேர்வில் ஒரு பாடம், இரு பாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியடைந்துள்ள மாணவர்களுக்குச் சிறப்பு துணைத் தேர்வுகள் 3.6.2011 முதல் நடைபெறும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் பரிமளா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேல்நிலை முதலாம் ஆண்டுக்கான இறுதித் தேர்வில் (பிளஸ் 1) தோல்வியுற்ற மாணவர்களுக்கு 3.6.2011 முதல் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் நாளன்று உரிய வினாத்தாள்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேல்நிலை முதலாண்டு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுவதுடன், பாடவாரியாக மாவட்ட அளவில் முதல் தரம் பெற்ற மாணவர்களுக்கும், அடுத்து நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்றார் அவர்.
நன்றி:
தினமணி (03.05.2011) |