காயல்பட்டினத்தில் கால்நடை வளர்ப்பு கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஆடு, கோழிகளும், ஒவ்வொரு தெருவிலும் குறிப்பிட்ட சில வீடுகளில் மாடுகளும் வளர்க்கப்பட்டது.
நாளுக்கு நாள் மக்கள்தொகை பெருகிவருவதையடுத்து, நகரில் அனைத்து தோட்டங்களும் அழிக்கப்பட்டும், பள்ளங்கள் மேடாக்கப்பட்டும் வீடுகளும், கடைகளும் கட்டப்பட்டு வருவதால் கால்நடை வளர்ப்பு என்பது பழங்கதையாக மாறி வருகிறது.
பசு மாடுகள் வளர்க்கப்பட்ட வீடுகள் செல்வந்தர்களின் வீடுகளாகக் கருதப்பட்ட நிலை இருந்தது. கொடுக்கும் தொகைக்கு கண்ணை மூடிக்கொண்டு கறந்த பாலை பாத்திரங்களில் நம்பிக்கையோடு வாங்கிச் சென்ற நிலை மாறி, இன்று இரு சக்கர வாகனங்களில் இளைஞர்களால் கொண்டு வரப்படும் வெண்ணிற திரவத்தை - கேட்கும் தொகையைக் கொடுத்து பாலாகக் கருதி பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இத்தனையையும் தாண்டி, பாலிலிருந்து தயிர் தயாரித்த மக்கள் இன்று (பாலும் கலந்த) தண்ணீரிலிருந்தும் தயிரெடுப்பது உண்மையில் சாதனைதான்.
மொத்தத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்ட இக்காலகட்டத்திலும், நகரின் பிரதான வீதி - பெரிய தெரு சந்திப்பில் கால்நடைகளுக்காக அகத்திக் கீரையும், அஞ்சல் அலுவலகம் அருகில் புற்கட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரல் விட்டு எண்ணுமளவிற்குள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்று தம் கால்நடைகளுக்கு உண்டியுபசரிப்பு செய்து வருகின்றனர்.
வீடு வீடாக ”புல்லு வேணுமா புல்லூ....” என்று கூவி வந்த மூதாட்டிகள் இன்று நகர எல்லையில் அமர்ந்து விற்கின்றனர். அவர்கள் மீண்டும் வீடு வீடாக வருவதும், தம் வீட்டில் முடங்குவதும் நகர மக்களின் நடவடிக்கையைப் பொருத்தது.
படங்கள்:
முத்து இஸ்மாஈல்,
ஸ்டார் சாரீஸ்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |