திருச்சி அருகே ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து சென்னை- தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் 9 மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 29.04.2011 வெள்ளிக்கிழமை இரவில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சார வயர்கள் துண்டிக்கப்பட்டன. இதனால், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வந்த பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
சென்னை- தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரயில் நள்ளிரவு 01.00 மணி முதல் அரியலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மின்சார வயர்கள் சீரமைக்கப்பட்ட பின்னர், சனிக்கிழமை காலையில்தான் ரயில் அங்கிருந்து புறப்பட்டு வந்தது.
இதனால், காலை 07.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேர வேண்டிய இந்த ரயில் 9 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. மாலையில் முத்துநகர் ரயில் வழக்கம்போல 7.45 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
நன்றி:
தினமணி (நெல்லை பதிப்பு - 01.05.2011)
இந்த ரயிலில் காயலர்கள் பலரும் பயணித்துள்ளனர். உம்றாவிற்காக சஊதி அரபிய்யாவிலுள்ள மக்கா சென்று திரும்பிய சார்ந்த குழுவினரும் அதில் உள்ளடக்கம்.
பயணித்த காயலர்கள் சார்பாக ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,
ஏதோ சில மணித்துளிகள் இவ்வாறு ரயில் ஆங்காங்கே நிற்பது வழமைதான்... அதுபோல்தான் நிற்கிறது என்று கருதினோம்... நள்ளிரவு ஒன்றரை மணிக்கு நிறுத்தப்பட்ட ரயில் மறுநாள் காலையில்தான் அவ்விடத்தை விட்டும் நகர்ந்தது. இதன் காரணமாக மிகுந்த சிரமமுற்றோம்...
அரியலூர் ரயில் நிலையம் சிறிய அளவிலானதே! அங்கு இருந்த கடைகளில் அனைத்துப் பொருட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன... தண்ணீர் பாட்டிலும் தீர்ந்துபோனது... எங்கள் கைவசம் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்துபோனது...
இதற்கிடையில், ரயிலில் உள்ள கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசினில் தண்ணீர் பெருமளவு பயன்படுத்தப்பட்டதால், சில மணி நேரங்களில் அதுவும் தீர்ந்துவிட்டது.... இதன் காரணமாக கழிப்பறைக்குச் சென்று சுத்தம் செய்யக்கூட இயலாத நிலை அனைவருக்கும் ஏற்பட்டது. ஒருவழியாக, காலை 06.30 மணிக்கு வண்டி கிளம்பியதும்தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்...
அதன் பிறகு, வண்டி எங்கெங்கெல்லாம் நின்றதோ, அந்த ரயில் நிலையங்களில் இருந்த கேன்டீன்களை பயணிகள் ஓடிச்சென்று மொய்த்துக்கொண்டனர்... மிகுந்த பசியோடும், தாகத்தோடும் இருந்ததால் இந்நிலை உருவானது... அனைத்துக் கடைகளிலும், ஒரு பொருள் கூட எஞ்சாமல் விற்றுத் தீர்ந்தது...
மொத்தத்தில் ஒரு சிறு பஞ்சத்தையே அனுபவித்துவிட்டோம்... எங்களுக்கு பெரிய அளவில் சோதனைகள் ஏற்படாமல் பாதுகாப்பாய் இல்லம் கொணர்ந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்...
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர். |