அல்காயிதா இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமாகக் கருதப்படும் ஒசாமா பின் லாடின் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அபோடபாத் என்ற ஊரின் ஓர் இல்லத்தில் ஒசாமா இருந்ததாகவும், ஞாயிறு அன்று அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமாவின் இருப்பிடம் குறித்த அறிகுறி கடந்த ஆகஸ்ட் மாதம் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் அவர் தேடப்பட்டுவந்ததாகவும், கடந்த வாரம் அவரைக் கைப்பற்ற அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் மேலும் தெரிவித்தார்.br>
செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அச்சம்பவம் மற்றும் பிற சம்பவங்களுக்கும் திட்டம் தீட்டியவர் ஒசாமா என குற்றஞ்சாட்டப்பட்டு, அமெரிக்கா உட்பட பல நாட்டு அரசாங்கங்களால் தேடப்பட்டு வந்தார். அவரைப் பிடிக்க உதவுவோருக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
அமெரிக்க உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் தற்போது அமெரிக்கா வசம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|