தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலைத் திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய கால இடைவெளிகளில் தேர்தல்களை நடத்துவது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வக் கடமை.
இதன்படி தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதியோடு முடிவடைகிற நிலையில், அதற்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தல் ஆணையமும் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வார்டுகள் மற்றும் வாக்காளர் விவரங்களை சனிக்கிழமைக்குள் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது. இதைப்போல தேர்தல்களை நடத்துவதற்குப் போதுமான அரசுப் பணியாளர்கள் உள்ளார்களா என்கிற விவரத்தையும் கேட்டிருந்தது.
ஆனால் வார்டு பிரிக்கும் ஆரம்ப கட்டப் பணிகூட இன்னும் எந்த அலுவலகத்திலும் தொடங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
2006 - தேர்தலில் 1,18,316 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கும், 14,379 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மறைமுக தேர்தல்களாக நடக்கும் மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளும் அடங்கும்.
இந்த முறை தேர்தலை நடத்துவதற்கு வார்டுகளை எந்த முறையில் பிரிப்பது என்பதில் சிக்கல் இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் பல தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான வார்டுகளும் வெவ்வேறு தொகுதிகளுக்குள் மாறிமாறி வருகின்றன. இவற்றைச் சீரமைத்து வார்டுகளைப் பிரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
குறிப்பாக, சென்னையின் பல தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டதுடன் அம்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட சில பகுதிகள் சென்னை தொகுதிகளில் சேர்க்கப்பட்டன.
இந்தச் சிக்கலோடு வார்டு பிரிப்பாளர்கள் சந்திக்கக்கூடிய மற்றொரு சிக்கல் 2011 மக்கள் தொகை கணக்கீடு படி வார்டுகளைப் பிரிப்பதா? அல்லது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே வார்டுகளைப் பிரிப்பதா என்பதும்.
வார்டு பிரிப்பு பணி முதன்மையாக மக்கள் தொகையின் அடிப்படையிலேயே பிரிக்கப்படுகின்றன. நலத்திட்டங்கள் முறையாகச் சென்று சேருவதற்கு இதுவே சரியான முறையாகும்.
5 ஆயிரம் பேர் வாழக்கூடிய பகுதியில் ஆயிரம் பேர் வாழ்வதாக கணக்கிட்டு அங்கு ஓர் உறுப்பினர் என்று நிர்ணயித்தால் எப்படி பல நலத்திட்டங்கள் எல்லோருக்கும் போய் சேரும் என்றும் உள்ளாட்சி அதிகாரம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனாலே 2011 கணக்கின்படி வார்டு பிரிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்.
2011இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி உறுப்பினர்களை நிர்ணயிக்க வேண்டும் என்றால் அதன் முழு விவரமும் வரும்வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்காகத் தமிழகத் தேர்தல் ஆணையம் காத்திருந்தால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத நிலை வருமாம்.
புதிய அரசுக்காகக் காத்திருப்பு:
தமிழகத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அதிகாரம் பெற்ற ஆணையமாக இருந்தாலும்கூட, உண்மையில் எந்த ஒரு முடிவையும் தமிழக அரசை சாராமல் எடுக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.
உறுப்பினர் எண்ணிக்கை, வேட்பாளர் டெபாசிட் கட்டணம், தேர்தல் செலவினங்கள் எல்லாம் அரசாங்கமே முடிவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றக் கூடிய அதிகாரிகள் புதிய அரசு அமைந்த பிறகு பார்க்கலாம் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டாலும் இதர பிரிவுப் பணியாளர்கள் சுணக்கமாகப் பணியாற்றுவதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறவர்கள் அதே சூட்டோடு உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி வெற்றி பெறவே முயற்சிப்பார்கள். ஆனால் இழுபறி நிலை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன் வரமாட்டார்கள் என்று பணியாளர்கள் கருதுகிறார்கள். எனவே திட்டமிட்டப்படி தேர்தல் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தலைத் தள்ளி வைக்க முடியுமா? சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஆறுமாதம் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க சட்ட விதி உள்ளது.
நன்றி:
தினமணி நாளிதழ் (நெல்லை பதிப்பு - 02.05.2011) |