காயல்பட்டினம் சதுக்கைத் தெரு உட்பட நகரில் பல தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக தூத்துக்குடியைச் சார்ந்த ரம்போலா என்பவருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் டெண்டர் மூலம் பணியளிக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணிகளும் துவக்கப்பட்டது.
ஆனால் பொறுப்பளிக்கப்பட்ட பல தெருக்களில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 31.03.2011 தேதிக்குள் புதிய சாலைகள் அமைக்கப்படாமல், தோண்டப்பட்ட நிலையில் குண்டும் குழியுமாக அவை இருந்து வருவதால் அப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அச்சாலைகள் வழியே ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் வர மறுப்பதால், அவசரத் தேவைகளுக்கு உடனடியாக எங்கும் புறப்பட்டுச் செல்லவியலாத நிலையுள்ளது.
குறிப்பாக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக இதுபோன்று தோண்டி வைக்கப்பட்டுள்ளதால் அத்தெருவில் அமைந்துள்ள சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், அஹ்மத் நெய்னார் பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கும், அத்தெரு வழியே செல்ல வேண்டிய காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகம் போன்ற இடங்களுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகரில் பெய்த கோடை மழை காரணமாக இப்பகுதியின் பள்ளமாக்கப்பட்ட சாலையில் தேங்கி நீர் இன்று வரை வற்றாமல் உள்ளது.
இந்நிலையில், இரட்டைகுளத்துப் பள்ளி நிர்வாகிகளான ஹாஜி முஹ்யித்தீன் தம்பி துரை, ஹாஜி எஸ்.இ.முஹ்யித்தீன் தம்பி உள்ளிட்ட பிரமுகர்களும், இப்பகுதியைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் தம் பகுதி நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.ஓ.செய்யித் அலீ ஃபாத்திமா ஏற்பாட்டில் ஒன்றுதிரண்டு இன்று காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய சாலை அமைப்புப் பணிகளை முடிக்காமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து அவர்கள் அப்போது தொடர்முழக்கம் செய்தனர்.
பின்னர் அங்கு வந்த நகர்மன்ற ஆணையாளரிடம், “நகராட்சி வாகனங்களின் பயன்பாட்டிற்கான எரிபொருள் கட்டணம், வாகனங்கள் பராமரிப்பு, தெருவிளக்கு மின்கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் தேவையான சொற்ப தொகைகளுக்கு நிதியொதுக்க இயலாத ஆணையாளர், புதிய சாலை அமைப்புப் பணிகளுக்கு மட்டும் எப்படி உடனடியாக பெருந்தொகைக்கான காசோலை அளிக்க முடிந்தது என்று தாம் கேட்டதாகவும், அந்த நிதி முன்னரே ஒதுக்கப்பட்டது என அப்போது அவர் விளக்கமளித்ததாகவும் நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்று பின்னர் அங்கு விரைந்து வந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, துணை தாசில்தார் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் பீர் முகைதீன், நகரமன்ற தலைவர் வாவு செய்யித் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அங்கு வந்தனர். இப்பிரச்சினை ஓரிரு தினங்களில் சரிசெய்யப்படும் என்றும், நகரின் அத்தியாவசிய பிரச்சினைகள் எதுவானாலும் தன் கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டால் இயன்றளவு விரைவாக அவற்றை நிறைவேற்றித் தர ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தகவல்:
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ் முஹம்மத் தம்பி மூலமாக,
தீன்தீன் முஹம்மத்,
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |